பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138


வாளாகும். இதனை அறிபவர்கள் இதனை நாள் என்று சொல்லாமல் வாள் என்பர் என்னும் கருத்தினைக் குறட்பா அளிக்கின்றது.

நாள்என ஒன்றுபோல் காட்டி உயிரிரும்
வாள் அது உணர்வார்ப் பெறின்.

வாள் என்று அறிந்துணர முடியாதவர்களுக்கு, நாள் என்று நினைக்குமாறு மயக்குவதாகக் காட்டி என்று குறிப்பிட்டுச் சொன்னார். உலகில் வாழுகின்ற மக்களில் மிகச் சிலரே வாள் என்று உணர்வார்கள். அப்படி உணர்கின்ற மக்கள் அரிது என்பதாம்.

ஆதலால்தான் உணர்வார்ப் 'பெறின்' என்று அருமையாக வைத்தார். 'ஈரும்' என்பது அறுக்கும் என்னும் பொருளில் வந்ததாகும். உயிரினை அறுத்துச் செல்கின்ற வேலையினை இந்த நாள் என்பது செய்து வருகின்ற தென்றால் அப்படிப்பட்ட நாள் என்பதனை எவ்வளவு பொறுப்புடன் பயனுள்ளதாக நாம் கழித்தல் வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது.

நாட்கள் பல சென்ற பிறகு உயிர் முடிவுக்கு வந்து விடுவதாகின்றது. நாளின் இப் பெருஞ் சிறப்பினைப் படைவீரன் வாயிலாக ஆசிரியர் கூறி வீரனுக்கு ஒவ்வொரு நாளும் போர்ப்பற்று நிறைந்ததாக இருக்கும் என்பதனை விளக்கி "விழுப்புண்படாத" .... என்ற குறட்பாவினை அமைத்தார்.

மெல்ல நகும் :

தமிழ் இலக்கிய வரலாற்றில் வீரமும் காதலும் சிறப்புடன் பேசப்படுவது இயற்கையே ஆகும். போர்க் காலத்தில் புண்படாத நாட்களை வீணான நாட்கள் என்று வீரன் கருதுகிறான் என்பதனை இப்பொழுது கண்டோம். அவ்வளவு உயர்ந்த பண்பினை வீரன் பெற்று இருக்கிறான். கையில் வேல் ஒன்றும் இல்லையே என்று கலங்கிய வீரன்