பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140


அப் பெண்ணை நோக்கினான். அவனுடைய அந்தத் தன்மையை நன்கு உணர்ந்துகொண்டு அந்தப் பெண் மெல்ல நகைத்தாள். அந்த நகைப்பில் இருக்கின்ற நல்ல முன்னேற்றத்தினை - காதல் வளர்ச்சியினை, காதலன் புரிந்துகொள்ள முடிகிறது.

"அசையியற்குஉண்டு ஆண்டுஓர் ஏஎர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்."

இம்மூன்று குறட்பாக்களைப் பார்க்கையில் மெல்ல நகும், போல நகும், பைய நகும் என்று நகைச் செய்திகள் சிந்தனைக்கு உரியனவாகும். உள்ளத்தில் மகிழ்ச்சியையும் முகத்தில் மகிழ்ச்சியையும் தோற்றுகின்ற உயர்ந்த பண்பினைக் காதலர்களிடையே காண முடிகின்றது.

இவ்வுலகில் பலவகைப்பட்ட தீயவர்களைக் காணுகின்றோம். பலர் கண்ட மாத்திரத்தில் முகத்தில் இனிமையாகச் சிரிப்பினைக் காட்டி பழகுவார்கள். மனத்தில் தீய எண்ணங்களை வைத்து இருப்பார்கள். அப்படிப்பட்ட வஞ்சகர்களை பார்த்தால் அஞ்சி. நாம் நடந்துகொள்ள வேண்டும். அவர்களின் நகைப்புக் குறிப்பு கடுமையானது. ஆகும்.

"முகத்தின்இனிய நகாஅ அகத்து இன்னா

வஞ்சரை அஞ்சப் படும்".

நகை முகம் கொடுத்து நம்மிடத்தில் பழகுபவர்களை எல்லாம் நல்லவர்கள் என்று எண்ணிவிடக்கூடாது. சில பேர் பொய்யாகவே நகை முகம் காட்டி வாழ்பவர்களாக இருக்கிறார்கள். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்கள். ஒருவனை அவன் இல்லாதபோது தீமையாகப் பேசுகின்றார்கள். புறம் கூறித் திரிகின்றார்கள். அவனைப் பார்த்த உடனேயே பொய்யாக நகைத்து இன்பமாக பேசுவார்கள். அறத்தினை அழிக்கின்றவர்களை விடக் கொடியவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.