பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141


"அறம்அழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறன்அழீஇப் பொய்த்து நகை"

புன்முறுவலுடன் நகைத்துப் பேசுகின்றவர்கள் பேச்செல்லாம் இனிமை தரும் என்று எண்ணிவிடக்கூடாது. நகை முகத்துடன் ஒருவரோடு ஒருவர் கூடி இனிய சொற்களைச் சொல்லி நண்பர்களாக வாழவேண்டும் என்ற மனமே இல்லாத தீயவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுடைய பழக்கம் எப்போதும் புறம் கூறுதலும் சேர்ந்து இருப்பவர்களைப் பிரித்தலும் ஆகிய கொடிய சிந்தனையே ஆகும். இப்படிப்பட்டவர்களிடமும் நாம் நெருங்குதல் கூடாது என்பதாகும்.

"பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தோற்றா தவர்."

நல்ல மனம் படைத்தவர்கள் நண்பர்களை இணைப்பவர்களாவார்கள். தீயவர்கள் நட்பினைப் பிரித்து விடுவார்கள். சிலர் வாழ்க்கையில் பகைமை உள்ளத்தினையே வாழ்க்கையாக வளர்த்துக்கொள்ளுவதில் இன்பமாக இருப்பார்கள். அவர்கள் உள்ளம் துன்பம் நிறைந்ததாக இருக்கும். நட்பினை வளர்ப்பவர்கள் இருந்த நிலையில் நீதியுடன் பொருந்திய பெரும் செல்வத்தினைப் பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். நகுதல் என்பது உயர்ந்த தன்மையையும் நயமாக உணர்த்துகின்றது.

"இகலான்ஆம் இன்னாத எல்லாம் நகலான்ஆம்

நன்னயம் என்னும் செருக்கு".

பகைமை என்னும் குணத்தினைப் பண்பு இவ்லாத தன்மை என்று அறிஞர்கள் கூறுவார்கள். நண்பர்களிடத்திலே பகைமை இல்லாமல் வாழ்வதுதான் உயர்ந்த வாழ்க்கை ஆகும். பண்பு இல்லாத பகை என்பதனை ஒருவன் விளையாட்டிற்குக்கூட கொள்ளக் கூடாது என்ற குறட்பா ஒன்று அருமையாகக் கூறுகின்றது.