பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

வரிசையில் வைத்துக் கூறப்படாததாக இருந்தாலும் ஈகைத் தன்மைக்கு அடிகோலுவதாக இருக்கும் நற்பண்பு என்றாவது கூறத்தான் வேண்டும்.

விருந்தினர் என்பவர்கள் எப்பொழுதோ நம் வீட்டிற்கு வருகின்றவர்கள். தமக்கேற்ற அளவு விருந்தினர்களைக் கூட உபசரிக்கும் நல்லெண்ணம் இல்லாதவர்கள் ஈகைத் தன்மைக்கு எங்ஙனம் இடமளிப்பார்களோ !

விருந்து :

‘விருந்திருக்க உண்ணுன் வேளாளன்’ என்றொரு பழமொழியுண்டு. இது மிகச் சிறந்த கருத்தினைக்கொண்டதாகும். வேளாளன் என்று குறிப்பாகக் கூறியதன் நோக்கம் எல்லோருக்கும் தெரிந்ததேயாகும். வேளாண்மைத் தொழில் செய்பவன் வீட்டில் எப்போதும் உணவுப் பொருள் இருந்துகொண்டே இருக்கும் என்பதும் ஒரு கருத்து. வேளாண்மைத் தொழில் செய்பவனுக்கு எப்போதும் பஞ்சமில்லை என்பதும் அத்தொழில் செய்பவன் மிகத் தாராளமான எண்ணங் கொண்டவனாக இருப்பான் என்பதும் கண்கூடான மெய்யுரை யாகும்.

ஆகவேதான், இப் பழமொழி வந்தது. விருந்தினர்களை உபசரிப்பதில் மிகவும் பெருமைகொண்டவனாக இருப்பான் என்பதும், விருந்தினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்கள் உண்ட பிறகே தான் உண்ணுவான் என்பதும் தோன்ற ‘விருந்திருக்க உண்ணான் வேளாளன்’ என்று கூறினார். இவ்வரிய பழக்கம் நற்குடியிற் பிறந்த நற்பண்பாளர்களுக்குத்தான் இன்றியமையாதது என்பதன்று. மனிதத் தன்மை பெற்ற அனைவர்க்குமே ஏற்ற கருத்தாகும். இதற்கும் மேலான சிறந்த குணத்தினைத்தான் ‘ஈகை’ என்று கூறுவர்.

விருந்தினர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது பழமொழிகளின் உரை நயத்தைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தனர். ‘விருந்திருக்க உண்ணான் வேளாளன்’