பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அறத்துப்பால்

1. கடவுள் வாழ்த்து



1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

“அ” என்னும் எழுத்தில் இருந்தே எல்லா எழுத்துக்களும் தோன்றின. வரிசை முறையிலும் அகரமே முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது. அவ்வாறே எல்லாவற்றிற்கும் முற்பட்டவராகிய கடவுளையே இவ்வுலகம் முதலாக உடையது. 1

2.கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்?

துய்மையான அறிவினையுடைய கடவுளின் சிறந்த திருவடிகளை நாம் வணங்க வேண்டும். அவ்விதம் வணங்காவிட்டால் நாம் கற்ற கல்வியால் பயனில்லை. 2

3.மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

அன்பர்களுடைய மனமாகிய தாமரையில் கடவுள் அமர்ந்திருக்கிறார். அக் கடவுளின் பெருமை வாய்ந்த திருவடிகளை நாம் வணங்கினால் நம் உள்ளத்திலும் அவர் எழுந்தருளியிருப்பார். அதனால் நாம் இந்த உலத்திலே நெடுங்காலம் இன்பமாக வாழலாம்.

‘நிலமிசை’ என்பதற்கு மேலுலகம் என்றும் பொருள் கூறுவர். சேர்தல்-இடைவிடாது நினைத்தல். 3

4.வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

கடவுள் விருப்பு வெறுப்பு இல்லாதவர்; அக் கடவுளை இடைவிடாது வணங்குவதால் நாமும் விருப்பு வெறுப்பு