பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

 திருக்குறள்


கினைச் சுமப்பவனுக்கும் ஊர்பவனுக்கும் இடையில் தோன்றும் உயர்வு தாழ்வு வேறுபாடுகளே அறத்தின் பயனை நமக்கு நேரில் விளக்கிக் காட்டும். 37

8.வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

நம் நாளை வீணாக்காமல் என்றும் அறஞ் செய்தல் வேண்டும். அவ்விதம் செய்தால் அந்த அறம் நாம் பிறந்து பிறந்து துன்பம் அடைவதற்குள் வழியை அடைக்கும் கல்லாக இருந்து, என்றும் இன்பம் அடையும்படி செய்யும். ஒழிவில்லாமல் அறம்செய்வோர் இல்வுலகில் துன்புற்றிராது மேல் உலகில் இன்புற்றிருப்பர். 38

9.அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.

அறநெறியில் நின்று அதனால் அடையும் இன்பமே இன்பமாகும். அவ்வாறு அறவழியில் அல்லாமல் வேறு தீயவழிகளில் வருவன எல்லாம் இன்பத்துக்குப் புறம்பானவை, துன்பத்தைத் தருபவை. அவற்றால் புகழும் இல்லை. 39

10.செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

ஒருவன் தன் கடமையாகக் கொண்டு தவறாமல் செய்ய வேண்டியது அறச்செயல் ஒன்றேயாகும். அவன் செய்யாமல் நீக்க வேண்டியது தீவினையே ஆகும். ஓரும் என்பது அசை நிலை, உயற்பாலது-செய்யாமல் காத்துக் கொள்ள வேண்டியது. 40