பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

திருக்குறள்



கோட்டையை முற்றுகையிடும் பகைவர் அழியும்படியாகக் கோட்டைக்கு உள்ளிருப்போர் பலப் பல வீரச் செயல்களைப் புரிந்து சிறக்கும் மாட்சியை உடையது அரணாகும்.

முனைமுகம்-போர்முனை; மாற்றலர்-பகைவர்; சாய- இறந்து பட; வினைமுகம்-(கோட்டைக்குள்ளே தங்கியுள்ள வீரர்கள் புரியும்) வினை வேறுபாடுகள்; வீறு எய்தல்-பலப்பல பொறிகளைக் கொண்டு பகைவரை எய்தல், எறிதல், குத்துதல், வெட்டுதல் முதலிய போர்ச் செயல்களைச் செய்து சிறப்புறுதல்; வீறு-சிறப்பு: மாண்டது. மாட்சிமைப்பட்டது. 749

10.எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.

மேற்சொன்ன எத்தகைய மேன்மைகளையெல்லாம் பெற்றிருந்த போதிலும் போர் புரியும் திறமை இல்லாதாரிடத்தில் உள்ள அரண் பயனில்லாதது ஆகும். 750

76. பொருள் செயல் வகை

1.பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.

ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், பொருளாகப் பலராலும் மதிக்கப்படச் செய்யும் செல்வத்தையல்லது வேறு சிறந்த பொருள் இவ்வுலகில் இல்லை.

பொருள்-செல்வம்; பொருளல்லவர்-மதிக்கப்படாதார்; அறிவில்லார், குணத்தால் இழிந்தவர், நோயாளர், தொண்டுக் கிழவர், பகைவர் இன்னோரன்னர். 751

2.இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.

குல உயர்வு, அறிவு, கல்வி, வீரம், அழகு முதலிய பிற நலன்களெல்லாம் பெற்றிருப்பவராயினும் பொருள் இல்லாதவரை எல்லாரும்_இகழ்வர்; பிற நலன்களுள் ஒரு சிறிதும் பெறாதவராக இருப்பினும், பொருள் பெற்றுள்ள செல்வரை எல்லாரும் பாராட்டுவர்.