பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/223

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நட்பாராய்தல்

213


2.ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம் தரும்.

குணத்தையும், செயலினையும் பல முறையும் பல வகைகளாலும் ஆராய்ந்து கொள்ளாதவன் கொண்ட நட்பு, முடிவில் தான் இறத்தற்குக் காரணமாகிய துயரத்தை அவனுக்குத் தந்து விடும். 792

3.குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு.</poem>}}

ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பினையும், குற்றத்தையும், குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்து அறிந்து அவனோடு நட்புக் கொள்ள வேண்டும்.

குன்றா இனன் என்பதற்குக் 'குற்றமற்ற சுற்றம்’ என்றும் பொருள் கூறுவர்; யாக்க-கட்டுக, சேர்த்துக் கொள்ளுக. 793

4.குடிப்பிறந்து தன்கண் பழிகாணு வானைக்
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு.

நல்ல குடும்பத்திற் பிறந்து தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு அஞ்சும் குணமுடையவனை, அவன் விரும்பத் தக்க பொருள்களைக் கொடுத்தேனும் நட்பாகக் கொள்ளுதல் சிறந்தது. 794

5.அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.

நல்லதல்லாத ஒன்றைத் தன் நண்பன் செய்யக் கண்டால், அவன் அவ்வாறு செய்ததற்காக அவனே வருந்தி அழக் கூடிய வகையில் எடுத்துச் சொல்லித் தடுத்து, அவன் அவ்வாறு செய்யாதபடி அவனுக்கு உறுதி மொழிகளை வற்புறுத்திக் கூறி, உலக வாழ்க்கையும் அறிந்து உணர்த்த வல்லவர்களுடைய நட்பினை ஆராய்ந்து பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

அல்லது-நல்லது அல்லாதது; அழச்சொல்லுதல்-எண்ணி வருந்தச் செய்தல்; 'இடித்து’ என்பது வற்புறுத்திக் கூறுதலைக் குறிக்கும் சொல்; வழக்கறிதல்-முன்னோர் காட்டிச் சென்ற நல்வழியை அறிந்திருத்தல். 795