பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/228

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

திருக்குறள்



வராக இருந்தால், அத்தகையோர் நட்பு வளர்வதைக் காட்டிலும் தேய்ந்து குறைவதே நல்லது. 811

2.உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.

தமக்குப் பயனுள்ள போது நட்புச் செய்து, பயனில்லாத போது விலகிப் போகும் பொருத்தம் இல்லாதவர் தம் நட்பினைப் பெற்றால் வரும் நன்மை யாது? இழந்தால் வரும் கேடு யாது?

உறின்-பயன் அடையின்; அறின்-பயன் அற்று விடின்; ஒரூஉம்-விட்டு நீங்கி விடும்; ஒப்பிலார்-பொருத்தம் இல்லாதவர், தகுதியற்றவர்; கேண்மை-நட்பு. 812

3.உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.

நட்பினால் தமக்கு வரும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பினைக் குறித்துக் கவலை கொள்ளாது பெறுகின்ற பொருளை மட்டும் பெரிதாகக் கொள்ளும் குணம் உடையவரும், பொருளைக் கவரும் திருடரும் தம்முள் ஒப்புமை உடையவராவர்.

அன்பு காரணமாக நட்புக் கொள்ளாமல் பெறும் பயன் காரணமாக நண்பராக இருப்பவர் பொருளைக் கவரும் திருடருக்குச் சமம் ஆவர் என்பது கருத்து.

உறுவது-தமக்குக் கிடைக்கும் பயன்; சீர்தூக்குதல்-அளந்து பார்த்தல்; பெறுவது கொள்வார்-தாம் பெறும் பொருளின் மீதே கண்ணாக இருப்பர்; கள்வர்-திருடர். 813

4.அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.

போர் இல்லாத காலத்துத் தாங்கிச் சென்று போர் நேர்ந்த போது, போர்க்களத்திலே கீழே தள்ளி விட்டு ஒடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் நட்பைப் பெற்றிருத்தலை விடத் தனிமையாக இருத்தலே சிறந்தது.

அமரகம்-போர் புரியும் இடம்; ஆற்றறுத்தல்-இடையில் கை விடல்; தாங்கிச் செல்வதை ஒழித்துக் கீழே தள்ளி