பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

திருக்குறள்


தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதனோடு நில்லாமல், அக்குற்றத்தை உடனே மறந்து விடுவது பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும் சிறந்தது. 152

3.இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

ஒருவனுக்கு மிகவும் துன்பமான நிலை வறுமை நிலையேயாகும். அவ்வறுமை நிலையைக் காட்டிலும் இழிவாகக் கருதப்படுவது, அவன் தன்னை நாடி வந்த விருந்தினரைப் பாதுகாவாமல் நீக்குதலே ஆகும். அது போல, ஒருவனுக்கு அமைந்துள்ள பல சிறந்த குணங்களுள்ளும் சிறந்ததாகக் கருதப்படுவது அறிவிற் குறைந்தவர்கள் தனக்குப் புரியும் தீங்குகளைப் பொறுத்துக் கொள்ளுதலே யாகும். 153

4.நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.

பல நல்ல குணங்களும் தம்மிடம் என்றும் நிலைத்து இருக்க வேண்டுமென்று ஒருவர் விரும்பினால், அவர் பொறுமையாக இருத்தல் என்னும் குணத்தினை மிகவும் பாதுகாப்போடு, கடைப்பிடித்து நடத்தல் வேண்டும்.

நிறையுடைமை-பல சிறந்த குணங்களும் நிரம்பப் பெற்று இருக்கும் தன்மை; நிறை-உள்ள உறுதியுமாம். 154

5.ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.

தமக்குப் பிறர் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளாமல், அவரைத் தண்டிப்பவரை உலகத்தவர் சிறந்தவர்களுள் ஒருவராக மதிக்க மாட்டார்கள்: அவ்விதம் தண்டிக்காமல், அத்தீமையைப் பொறுத்துக் கொள்ளும் குணம் வாய்ந்தோரைப் பொன்னைப் போற்றிக் காப்பது போலத் தம் உள்ளத்தின்கண் வைத்துப் போற்றிப் பாதுகாப்பர்.

ஒறுத்தாரை-தண்டித்தவரை; ஒன்றாக-சிறந்தவர்களுள் ஒருவராக, ஒரு பொருளாக;: வையார்-மதிக்க மாட்டார்; பொதிந்து வைப்பர்-தம் உள்ளத்தின் கண் வைத்துப் பாதுகாப்பர். 155