பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

27

அதற்குத்தக நிற்பவரும் ஆவர். இந்நிலையினர் தாம் உயிர் வாழ்வதற்குரிய உண்டிக்கும், நோய்க்கு மருந்திற்கும் இல்வாழ்க்கையுடைய சம்சாரியை எதிர்நோக்கியே இருக்க வேண்டியவர் ஆவர். இங்ஙனம் வாழும் முனிசங்கத்தவரே வானப்பிரத்தர் ஆவர். (பேரா. சக்கரவர்த்தி - குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு விசேடவுரை)

இதுபற்றி தி. ஆ. பக்கம் ௬௯ இல் அடிக்குறிப்பாக எழுதப் பட்டதும் அறிதற் பாலதாகும் “வானப்பிரஸ்தாஸ்ரம மென்பது, தர்மார்த்தங்களை அனுபவித்து இல்லறத்தினின்று விலகி வனத்தில் சென்று முற்றுந் துறந்த முனிவரிடம் அடைந்து அவருக்கு சிஸ்ருஷை செய்து கொண்டு அவரிடம் தவத்திற்குரிய சில தத்துவங்களை யுணர்ந்து ஒழுகுவதாகும். இதில் இரண்டு விதமாம். முதலாவது, கெளபீனமும் கண்ட வஸ்திரமும் அணிந்து கமண்டலத்துடன் கூடியிருப்பதாம். இரண்டாவது கெளபீன மாத்திரம் உடைத்தாகிக் கமண்டலமும் பிஞ்சமும் கொண்டிருத்தலாம்” (திருவுள்ளம் நயினார் கெளபீன கமண்டல பிஞ்ச தாரியாயிருந்து முற்றுந்துறந்தவர் ஆவர்)

“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்
றாங்கு ஐம்புலத்தாறு ஒம்பல் தலை” (43)

எனும் குறளில் ‘தென்புலத்தார்’ என்பது பிதிரர்களைக்குறிக்கும் என்பர் பரிமேலழகர். காகிதக் கையெழுத்துச் சுவடியிலும் பிதிரர் என்றுள்ளது அச்சு நூலில் “உயிர் துறக்கும் தறுவாயில் உள்ள முதியவர்கள்” என்று காணப்படுகிறது.

பிதிரர் ஆவார் படைப்புக் காலத்து அயனாற் படைக்கப் பட்டதோர் கடவுட்சாதி என்பது பரிமேலழக ருரை. பிதிரர்க்குத் தருப்பணம் கொடுப்பது இங்குக்குறிக்கப்படுகிறது. பிதிரர்க்குத் தருப்பணம் கொடுப்பது ஜைநரிடத்துவழக்கில் இல்லை எனினும் பேராசிரியர் சக்கரவர்த்தி அவர்கள் தம் திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பில் பக்கம் 45-இல் “ The pitru darpana is not altogether unknown in the South Indian Society of Jains தென்னிந்திய ஜைந சமூகத்தாரிடம் பித்ருதர்ப்பணம் முழுமையும் அறியாத தொன்றல்ல என்று கூறியுள்ளார். (ஜைநச்சார்பான உரை அச்சுநூலில் காண்க).