பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

திருக்குறள்

மேற்கண்ட ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்கு ஒரு சிறந்த முகவுரை உண்டு, “அம்முகவுரை சைன சமயத்தைக் குறித்தும். இந்து சமயத்தைக் குறித்தும், உலகத்தத்துவங்களைக் குறித்தும், தமிழ் வடமொழி இலக்கியங்களைக் குறித்தும் மிகுதிட்பட்ட அரிய கருத்துக்களைக் கூறுவதாக உள்ளது” அம்முகவுரையைத் “திருக்குறள் வழங்கும் செய்தி” என்ற தலைப்பில் 1959 இல் பகவதி ஜெயராமன் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்து வழங்கி யுள்ளார்கள். (இந்நூலும் இந்நாளில் கிடைத்தற்கரிதாயிற்று)

மேற்கண்ட நூல்கள் வெளிப்படுவதற்கு முன்னரே திருக்குறள் ஜைநச் சார்பான நூல் என்ற கருத்தைப் பல மேற்கோள்களுடன் எழுதி அச்சிட்டு வெளியிட்டவர் காஞ்சிபுரம் தி. அ அனந்தநாத நயினார் அவர்கள் ஆவர். இவர் 1932 இல் திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைந சமய சித்தாந்த விளக்கமும் (முதற் பாகம்) என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இந்நூற்குத் தமிழ்த்தென்றல் திரு. வி. க. அவர்களின் அரிய முன்னுரையும் உண்டு. இந்நூல், திருக்குறள் ஆசிரியர், ஜைந சமயத்தவரே என்ற கொள்கையை வலியுறுத்துவது; அதற்கு ஏற்பப் பல மேற்கோள்கள் கொண்டு விளங்குவது. இதனானே இந்நூற்குத் தகவுரை எழுதிய ஆர்முகஞ் சேர்வை அவர்கள் இந்நூலாசிரியரை “மேற்கோண்மாரிப் பெரும்புயல்” என்று போற்றினார். இவர் திருக்குறள் கடவுள் வாழ்த்துக்குறள்கட்குத் தந்துள்ள விளக்க வுரைகளும், பிறவும் படித்துப் பயன் பெறுவதற்குரியனவாம். இவர் இந்நூலை யெழுதுவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிக்கு எல்லையில்லை எனலாம். இம்முயற்சி போற்றுதற்குரியது. இவர் ஜைநச் சார்பாகவே எழுதியுள்ள உரைப்பகுதி மட்டும் தொகுத்துப் பிற்சேர்க்கை I இல் கொடுத்துள்ளேன். ஆண்டுக் காண்க. இவர் திருக்குறளுக்கு ஜைநச் சார்பாகவே, பரிமேலழகர் உரை யெழுதியது போன்று, உரையெழுதி அச்சிட்டிருந்தால் அது பொன்மலர் நாற்றமுடையது போலச் சிறக்கும்; தமிழுக்கும். திருக்குறளுக்கும், ஜைநத்துக்கும் செய்த பெருந்தொண்டாகவும் அமைந்திருக்கும்.

“தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பருதி பரிமேலழகர் — திருமலையர்
மல்லன் பரிப்பெருமான் காலிங்கர் வள்ளுவர் நூற்
கெல்லையுரை செய்தா ரிவர்”