பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

41

என்ற வெண்பாவால் திருக்குறட்குப் பதின்மர் உரை செய்தனர் என்பது போதரும். இவற்றுள் தருமர் என்பாருடைய உரை ஜைனச் சார்புடையது என்று பேரா. அ. சக்கரவர்த்தி கருதுகிறார். தம்மிடம் சிலர் தருமருரை எனற பெயரில் சில ஏடுகளைத் தந்ததாகவும் அவை ஜைனச் சார்புடையன அல்ல எனவும் அவர் கூறுகிறார். தருமர் யார் என்று ஈண்டு உரைப்பது பொருத்தமாகும்.

தென்னார்க்காடு மாவட்டத்துச் சிற்றுார்களில் ஒன்று திருவாரூர். இவ்வூரில் வேளாண் குடியில் புகழனார் மாதினியார் எனும் இருவருக்கும் மருணிக்கியார் என்றொருவர் தோன்றினார்; இளமையிலேயே பெற்றோர்களை இழந்த இவர்,

“காவளர்த்தும் குளந்தொட்டும் கடப்பாடு வழுவாமல்
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும் விருந்தளி த்தும்
நாவலர்க்கு வளம்பெருக நல்கியும் நானிலத்துள்ளோர்
யாவருக்குந் தவிராத ஈகை வினைத் துறை நின்றார்.”

மேலும் இவர் வாழ்க்கை நிலையாமையை நன்குணர்ந்தார்: சமயங்கள் ஆனவற்றின் நல்லாறு தெரிந்துணர விழைந்தார்: “ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின் சாரப் பொய்யாமை நன்று” (323) என்ற குறள் நெறியை அறிந்தார்; கொல்லாமையைக் கடைப்பிடித்து ஒழுகும் சமண சங்கத்தார் வாழ்ந்த பாடலிக்கு (திருப்பாதிரிப் புலியூர்க்கு)ச் சென்றார். சைன சமய நூல்களைக் கற்றார். தயா மூல தன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்றார்; அவர்களுள் மேலோராகித் தரும சேனர் என்று சிறந்து விளங்கினார். இவர் பாடலியில் வாழ்ந்த நாட்களில் திருக்குறட்கு உரையியற்றியிருத்தல் கூடும். அவ்வுரையே “தருமருரை” யெனப் பெற்றது. இவ்வூகம் சரியான தெனில், அவ்வுரை கிடைக்குமெனில் - அதுவே ஜைன சமயச் சார்பான உரையாதல் உறுதி. அவ்வுரை கிடைக்காமை தமிழர் செய்த போகூழேயாகும், தவக் குறை யென்னலுமாம்.

இனி, இங்கு அச்செய்தும் உரைச்சுவடி. காகிதக் கையெழுத்துச் சுவடியாகத் தஞ்சை மகாராஜா சரபோஜி சரசுவதி மகால்


பெரிய புராணம் - திருநாவுக் கரசர் புராணம் - செ 36.