பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



465

திருக்குறள்

மாலைப் பொழுதிலே அனுபவிக்குந் துயரினையும், அதற்கு மருந்தான மடலினையும், முன்னே அறியேன்: இப்பொழுது எனக்கு மாலைபோலத் தொடர்ந்த சிறு வளையினை யுடையவள் தந்தாள் என்றவாறு.

காமம் எப்பொழுது முண்டானாலும் மாலைப் பொழுதிலே அதிகமாத லுடைமையின், மாலையுழக்குந் துயர் என்றார்.

1136. மடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற

படலொல்லா பேதைக்கென் கண்

என்பது, மடலுாரும் பொழுது, இன்றைக்கும் கழிந்தது என்றவளுக்குச் சொல்லியது:

உன்பேதை காரணமாக என் கண்கள் ஒரு பொழுதும் தூங்குகிறதில்லை; அதனால் எல்லாரும் தூங்குகிற நடு இரவிலும் நான் மடலூர்கிறதையே நினைய நின்றேன் என்றவாறு.

1137. கடலன்ன காம முழந்து மடலேறாப்

பெண்ணிற் பெருந்தக்க தில்

என்பது, பேதைக்கு என் கண் படலொல்லா என்பது பற்றி ‘அறிவில்லாரான ஸ்திரீகளிலும் அஃதுடைய புருஷர்களன்றே பொறுப்பவர்கள்’ என்றவளுக்குச் சொல்லியது:

சமுத்திரம் போலக் கரையில்லாத காம நோயினை அனுபவித்தும், மடலூராமற் பொறுத்திருக்கின்ற பெண் பிறப்புப் போல், மிக்க தகுதியையுடைய பிறப்பு உலகத்தில் இல்லை என்றவாறு.

பிறப்பு விசேடத்தால் அவ்வடக்கம் எனக்கில்லை; நீ அதனை அறிகின்றிலை என்பதாம்

இவ்வேழும் தலைமகன் சொன்னது; மேல் தலைமகள் கூற்று.