பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

திருக்குறள்

இவ்வாய்வுக்கு வேண்டிய நூல்களையும் பிறவற்றையும் தந்து அவ்வப்பொழுது உதவி புரிந்த தஞ்சை சரசுவதி மகால் நூலகர், உதவி நூலகர்கள், தமிழ்ப்பண்டிதர் ஆகியோர்க்கும் என் நன்றி.

இந்தச் சுவடியை ஒப்பீடு செய்வதற்குக் கவிராஜ பண்டிதர் உரை கொண்ட அச்சுநூல் தேவைப்பட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 'மாரி மாட்டு எண்னாற்றுங் கொல்லோ உலகு' என்ற குறட் கேற்ப எளியேன் கேட்டதும் பண்டிதர் உரை பொருந்திய அச்சு நூலையும், ஜைன சமயக் கோட்பாடுகள் பற்றி அறிந்து கொள்வதற்குரிய சில நூல்களையும் கொடுத்து உதவியவர், தஞ்சை, கருந்தட்டான் குடி ஜிநாலயத் தெருவில் வாழ்பவரும், திரு. ஜி.ந. குமரன் என்னும் ஜைனப் பெரியாருடைய வாழ்க்கைத் துணைவியாரும், ஜைன சமயக் கோட்பாடுகளைக் கசடறக் கற்று ‘நிற்க அதற்குத்தக’ என்ற வள்ளுவத்துக் கேற்ப நடக்கின்றவர்களும், “அறம் கூறும் அன்னை” என்ற சிறப்புப் பட்டம் உடையவர்களுமான திருமதி ராஜலக்ஷ்மி ஜி. ந. குமரன் அவர்கள் ஆவர். அவர்களுடைய சமய அறிவும் பிற நற் பண்புகளும் போற்றற்குரியன. அவர்கள் தந்த ஊக்கத்தாலேதான் இச் சுவடியை அச்சிடற் கேற்ற வகையில் அமைக்க முடிந்தது. அவர்கள் “ஞானமும் மாட்சியும் ஒழுக்கமும் நிறைந்து” வாழ்க என வாழ்த்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி செலுத்துகிறேன்.

ஏதேனும் ஒலைச் சுவடியுடன் ஒப்பீடு செய்ய வேண்டுமென நினைத்த பொழுது, சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் ஒரு சுவடியிருப்பதை யறிந்து, அங்குச் சென்று ஒப்பீடு செய்தேன். அப்பொழுது சுவடியைத் தந்து உதவிய அந்நூலகத்துக் காப்பாளர், தமிழ்ப்பண்டிதர் ஆகியோருக்கு யான் நன்றி யறிதலுடையேன்.

சென்னையில் சில ஜைன அன்பர்களோடு இவ்வுரைபற்றி யறிய விழைந்தேன். அவ்வமயம் ஜைன நூல்களில் வல்லவரும், காவல் துறை (சிறை) Inspector General ஆக விளங்குபவரும் ஆகிய உயர் திரு S. ஶ்ரீபால் அவர்களைக் கண்டேன். அவர்கள்