பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

494

திருக்குறள்

எனக்கின்ப முண்டாகா நின்றது என்றவாறு.

1215. நனவினாற்[1] கண்டதூஉ மாங்கே கனவுந்தான்

கண்ட பொழுதே யினிது

என்பது இதுவுமது.

முன்பு நினைவினாலே[2] காதலரைக் கண்டு கூடியனுபவித்த இன்பமும், அப்பொழுதே இனிதாயிற்று; இன்று கனவிலே கண்ட இன்பமும் கண்ட பொழுதே இனிதாயிற்று; ஆனபடியினாலே, எனக்கு இரண்டு வகையும் ஒத்துச் சரியாயிருந்தன என்றவாறு

1216. நனவென ஒன்றில்லை யாயிற் கனவினாற்

காதலர் நீங்கலர் மன்

என்பது இதுவுமது

நனவென்று சொல்லப்படுகின்ற ஒருபாவி இல்லாவிட்டால், கனவிலே வந்து கூடிய காதலர் என்னைவிட்டுப் பிரியார் என்றவாறு.

1217. நனவினா னல்காக் கொடியார் கனவினா

னென்னெம்மைப் பீழிப் பது

என்பது*

ஒரு நாளும் நனவிலே வந்து கூடாத பொல்லாதவர் தினந்தினமும் கனவிலே வந்து நம்மை வருத்துகிறது என்ன வியைபு பற்றி என்றவாறு.

1218. துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கால்

நெஞ்சத்த ராவர் விரைந்து

என்பது

என் நெஞ்சை விடாமல் இருக்கிற காதலர் நான் துாங்குகிற பொழுது வந்து என்தோள் மேலராய்ப் பிறகு விழிக்கிறபோது திரும்பி என் நெஞ்சிலே இருப்பர் என்றவாறு.


*இங்கும் அடுத்த மூன்று பாடல்களுக்கும் பரிமேலழகர் தந்த துறைக் குறிப்பு இல்லை.

  1. நனவில்
  2. நனவில்