பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளியிடுவோர் உரை


தமிழின் தொன்மைச் சிறப்பையும், தமிழரின் பெருமையையும் உலக அரங்கில் உயர்த்திக் காட்டுகின்ற சிறந்த நீதி இலக்கியமாகத் திருக்குறள் விளங்குகின்றது. பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான திருக்குறள், நெடிய தமிழ் இலக்கிய வரலாற்றில் இன்றுவரை நிகரற்ற நூலாக நிலவி வருகின்றமை அனைவரும் அறிந்ததே.

திருக்குறளின் குறட்பாக்களுக்குக் காலந்தோறும் பற்பல அறிஞர்கள் புதிய புதிய கோணங்களிலும் குறள்களுக்குரிய உண்மைப் பொருளைக் கண்டு கூறும் வகையிலும் உரை வரைந்து தந்துள்ளனர். நூலொப்பவே உரைகளும், நூலாசிரியரொப்பவே உரையாசிரியரும் இலக்கிய உலகால் மதிக்கப்பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

திருக்குறளுக்குப் பண்டைக் காலத்தில் உரை எழுதிய பதின்மரைப் பற்றிக் குறிப்பிடுகின்ற வெண்பா ஒன்று உள்ளது.

'தருமர் மனக் குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமேலழகர் - திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர் நூற்(கு)
எல்லையுரை செய்தார் இவர்'

என்பதே அவ்வெண்பாவாகும்.

இப்பதின்மரின் உரையோடு, மேலும் பலரின் உரைகள் திருக்குறளுக்கு எழுதப்பெற்றுள்ளன. இக் காலத்திலும் தேவநேயப் பாவாணர், புலவர் குழந்தை மு. வ., நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, கா. சு. பிள்ளை, வி. முனுசாமி முதலியோர் உரை எழுதியுள்ளனர்.