பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

510

திருக்குறள்

1266. வருகமற் கொண்க னொருநாட் பருகுவன்

பைதனோ யெல்லாங் கெட

என்பது

இத்தனை நாளும் வாராத நாயகன் ஒருநாள் என் கண் எதிரே வருவானாக வந்தால் என் காம நோயெல்லாங் கெட அமிர்தத்தை[1] ஐம் பொறிகளானும் பருகக் கடவேன் என்றவாறு.

பருகுகிற தாவது: கண்களினாலே அவர் வடிவம் பார்த்தும், காதினாலே வசனத்தைக் கேட்டும், மூக்கினாலே மோந்தும், வாயினாலே முத்தமிட்டும், மெய்யினாலே தழுவியும் இன்புறுதல்.

1267. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்

கண்ணன்ன கேளிர் வரின்

என்பது

கண்போலச் சிறந்த நம் நாயகன் வந்தால் அவர் கொப்பென வரவில்லை என்று பிணங்கி யிருப்பேனோ? அஃதல்லாமல் பிரிவாற்றாமை நோக்கிப் புல்லுவேனோ இந்த இரண்டு வகையும் வேண்டுதலான் இரண்டையும் கலந்து செய்வேனோ யாது செய்யக் கடவேன் என்றவாறு.

1268. வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து

மாலை யயர்கம் விருந்து

என்பது, வேந்தனைச் சேவிக்கிற தலைமகன் சொல்லியது.[2] நம்முடைய வேந்தன் சண்டை பண்ணி வெல்வானாக; அவன் வென்றால் நாமும் மனைவியைச் சேர்ந்து மாலைப் பொழுதிற்கு அங்கு விருந்து அயர்வே[3]மாக என்றவாறு. விருந்தாவது, புதியதாய் வருகிறது.


  1. என்றது தலைவனை
  2. குறிப்புரை காண்க
  3. அயர்வேம் - கொண்டாடுவோம்