பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

512

திருக்குறள்


உன் மனத்திலே இருக்கிறதை நீ சொல்லாமல் மறைத்தாலும் அதற்கு நின் கண்கள் உடன்படாதே. உன்னையல்லாமல் எமக்குச் சொல்லுவதொரு காரியம் உண்டாயிரா நின்றது; இனி நீயே அதனை எமக்குத் தெளியச் சொல்லுவாயாக என்றவாறு.

1272. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்

பெண்ணிறைந்த நீர்மை பெரிது

என்பது, நாணத்தினால் அவள் அது[1] சொல்லாத வழி, நாயகன் தோழிக்குச் சொல்லியது:

என் கண் நிறைந்த அழகினையும் மூங்கிலையொத்த தோள்களையு முடைய நின் பேதைக்கு மற்றைப் பெண்பாலாரிடத்து நிறைந்த மடமை அவ்வளவின்றி மிகுந்த தென்றவாறு.

1273. மணியுட்[2] டிகழ்தரு நூல்போன் மடந்தை

யணியுட்[3] டிகழ்வதொன் றுண்டு

என்பது இதுவுமது

கோக்கப்பட்ட பளிங்கு மணிக்குள்ளேயிருந்து புறத்திலே காண்பிக்கிற நூல் போல, இந்த ஸ்திரீயினுடைய ஆபரணத்துக்குள்ளே யிருந்து புறத்திலே பிரகாசிக்கிற குறிப்பு ஒன்றுண்டு என்றவாறு அணி, புணர்ச்சியினால் வந்த அழகு: அதனை யான் அறியேன் நீ அறிந்து சொல் என்பது கருத்து

1274. முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு

என்பது இதுவுமது

அரும்பினுள்ளே இருக்கிற வாசனை புறத்திலே மணந்து தோன்றாது போல, உன்னுடைய பேதை என்னுடனே நகக்கருதும் நகை வாயினுள்ளே யல்லாமல் வெளிப்படாததொரு குறிப்புண்டு என்றவாறு.


  1. பிரிவச்சம்
  2. மணியில் என்பதும்
  3. அணியில் என்பதும் பிறர்பாடம்