பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அரசியல் 104

தன்னைவிட வலிமையான கூகையைப் பகல் நேரத்தில் காக்கை போரிட்டு வென்றுவிடும்; அவ்வாறே பகைவரை வெல்லும் வேந்தர்க்கும் தகுந்த காலம் வேண்டும். 481 காலத்தோடு பொருந்த முயற்சிகளைச் செய்து வருதல், செல்வத்தைத் தம்மைவிட்டுப் போகாமல் பிணித்து வைக்கும் கயிறு ஆகும். 482 ஏற்ற கருவிகளோடு, தகுதியான காலத்தையும் அறிந்து செயலைச் செய்தால், செய்வதற்கு அரிய செயல் என்பதும் உண்டோ? 483

தகுதியான காலத்தை ஆராய்ந்து, ஏற்ற இடத்திலேயும் செய்தால், உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும். 484 உலகை வெற்றி கொள்ளக் கருதுகின்றவர்கள், அதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்து, அதுவரையும் மனந்தளராமல் காத்திருப்பார்கள். 485 ஊக்கம் உடையவன் ஒருவன் பகைவர்மேல் போருக்குச் செல்லாமல் ஒடுங்கியிருப்பது, போரிடும் ஆட்டுக்கடா பகையைத் தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மையது. 486 அறிவுடையவர், பகைவர் கெடுதல் செய்த அந்தக்கணமே தன் சினத்தை வெளியே காட்டார்கள், தகுந்த காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள். 487 தமக்குச் சாதகமான காலம் வரும் வரையிலும் பகைவரைக் கண்டால் பணிந்துபோக, அவர்கட்கு முடிவுகாலம் வரும்போது அவர்கள் தலை கீழே விழும். 488 கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்தபோது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றிபெற வேண்டும். 489 காலத்தை எதிர்பார்க்க வேண்டிய பருவத்தில், கொக்கைப் போல இருந்து காலம் வாய்த்தபோதில் கொக்கு மீனைக் குத்தினாற்போலத் தவறாமல் செய்துமுடிக்கவேண்டும், 490