பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால் - கற்பியல் 270

நாம் ஊடும்போது அவர் அடைகின்ற அல்லல் நோயையும் சிறிது நேரம் காணலாம்; அதற்காக, அவர் வந்ததும், அவர்பாற் சென்று தழுவாமல் பிணங்கியிருப்பாயாக. 1301 உணவுப் பண்டங்களில், அளவாக உப்புச் சேர்ந்திருப்பது போன்றதே ஊடல் அதை அளவுகடந்து சிறிது நீள விட்டாலும் உப்பின் மிகுதிபோல அது கெட்டுவிடும். 1302 தம்மோடு ஊடியவரைத் தெளிவித்துத் தழுவாமல் விட்டுவிடுதல், துன்புற்று வருந்துவாரை மேலும் துன்பஞ் செய்து வருந்தச் செய்வதுபோன்ற கொடுமையாகும்! 1303 ஊடிப் பிணங்கியவரைத் தெளிவித்து அன்பு செய்யாமல் கைவிடுதல், முன்பே நீரில்லாது வாடிப்போன வள்ளிக் கொடியின் வேரை அறுப்பதுபோன்றது ஆகும்! 1304 நல்ல தகைமைகள் பொருந்தியுள்ள நல்ல ஆடவருக்கு அழகாவது, மலரன்ன கண்களையுடைய அவர் காதலியர் இடத்தே உண்டாகும் ஊடலின் சிறப்பே ஆகும். 1305 பெரிய பிணக்கமும் சிறிதான பிணக்கமும் இல்லாமற்போனால், காமமானது, மிகக்கனிந்த கனியும், பழுக்காத கருக்காயும்போலப் பயனற்றது ஆகும். 1306 ஊடியிருத்தலிலும் காதலர்க்கு உண்டாவதோர் துன்பம் உளது: அது, கூடியிருப்பதுதான் இனிமேல் நீட்டிக்காதோ என்று நினைத்து வருந்தும் அச்சமாகும். 1307 நம்மாலே இவரும் நோயுற்றார் என்று உணர்ந்து, அதைத் தீர்க்க முயலும் காதலர் இல்லாதபோது, வீணாக வருத்தம் அடைவதனால் என்ன பயன்? 1308 நீரும் நிழலிடத்தே உள்ளதானால் இனியதாகும்; அதுபோன்றே, ஊடலும் அன்புசெலுத்துவோரிடத்தே நிகழுமானால், இனிமையைத் தருவதாகும். 1309 ஊடல் கொண்டபோது தெளிவித்து இன்பம் செய்யாமல் வாடவிடுகின்றவரோடு, எம் நெஞ்சம் கூடுவோம்' என்று நினைப்பது, அதுகொண்டுள்ள ஆசையினாலே ஆகும். 1310