பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மதிப்புரை
வித்துவான், டாக்டர்,
திரு. மொ. அ. துரை அரங்கனார் அவர்கள்
எம்.ஏ., எம்.ஓ. எல்., பிஎச்.டி.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்,
மதுரை.

முத்தமிழ்க் காவலர், ஆண்டிலும் முதியவர், பல பல குழுக்களில் தலைமையும் உறுப்பும் உடையவர், உலகறி உத்தமர். உயர்திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் எழுதிய “திருக்குறள் கட்டுரைகள்” என்னும் சுவடிக்கு மதிப்புரை வழங்க யான் பெற்றுள்ள தகுதி என்கொலோ? அறியேன்.

திருக்குறளே விசுவநாதர் வலம் வரும் கோயில்; திருவள்ளுவரே அவர் வழிபடும் கடவுள். திருவள்ளுவர் வகுத்துள்ள நெறியே அவர் கடைப்பிடிக்கும் நெறி. திருக்குறட் கருத்துக்களே அவர் உண்ணும் சோறும், பருகும் நீரும். அக்கருத்துக்களை ஆர அமரத் தம் இயற்கை மதி நுட்பத்தாலும், நுண்மாண் நுழைபுல அறிவாலும் கடைந்து அமிழ்தமாக்கித் துய்த்து, அமர வாழ்வு எய்தி விட்டார் முத்தமிழ்க் காவலர் எனில், அது மிகையே ஆகாது.

யானும் திருக்குறள் வாழ்வே வாழ அவாக் கொண்டவன். திருக்குறள் வாழ்வே வாழ்ந்து வருகின்றேன் என்று பணிவோடு கூறுகிறேன். ஆனால், அவ்வாழ்வால் அடைந்துவரும் பயன்...?

திருக்குறளை உலகமறை என்பார் தமிழகத்தார். ஏனைய மொழியினரும் திருக்குறளை மொழிபெயர்த்துப் போற்றிக் கொள்கின்றனர் எனத் தமிழகத்தார் கூறிப் பெருமதிப்புப் பெற்றவர்போல் களிப்புறுவர். எம்மொழிக்குரியவரும் கைக்கூலி வாங்குதலோ கொடுத்தலோ தவறென்றே கொள்வர். ஆனால், கைக்கூலி கொடுத்தாலன்றி ஒரு சிறு தொழிலையும் இக்காலத்தில் சாதித்தல் இயலாததாகின்றது. “முகநக நட்பது நட்பன்று” எனத்