பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
88


பருகக்கூடச் சிலர்க்குத் தேநீர் கொடுக்க மனம் வாராது; இனிக்கப் பேசி அனுப்பி வைப்பதில் அவர்கள் திறமையைக் காட்டுவார்கள். அவர்கள் அநாகரிகம் உடையவர்கள். வருவதே ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க. கேட்கும் முன் அவர்கள் தேவை அறிந்து நீட்டுக; அன்பு காட்டுக; கடுக்கப் பேசி அவர்களை நடக்க வைக்காதே.

காக்கை தன் இனத்தையே கூவி உண்ணும். நீ மட்டும் ஏன் தனித்து உண்கிறாய்? சுற்றத்தார்க்கு விருந்து வை; அவர்களை அருந்த வை. அவர்களுக்கும் மகிழ்ச்சி: உனக்கும் புகழ்ச்சி ஏற்படும்.

பொதுஉடைமை, சமநீதி என்று கூறிக்கொண்டு அவரவர் தகுதி போற்றாது பொதுநோக்கால் நோக்கின், யாருமே நீ தாழும் போது கைகொடுத்து உதவ மாட்டார்கள். சிலரைத் தேர்ந்து சாதகமாக்கிக் கொள்க: அவர்களுக்கு வேண்டுவன தருக; அவர்கள் உன்னைச் சுற்றிப் பாதுகாப்பாக இருப்பர்.

ஏதோ மனத் தகராறு ஏற்படுவது சகஜம்தான்; குற்றம் பார்க்கில் சுற்றமே இல்லை; கண்ணில் கை பட்டுவிட்டால் அதனை வெட்டிவிட முடியுமா? மறுபடியும் அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள். வேறுபாட்டுக்குக் காரணமாக இருந்தது கால ஓட்டத்தில் மறைந்துவிடும்; பழைய சுற்றப் பெருக்கம் மீண்டும் தளிர்க்கும்; தளிர்க்க வை.

கருத்து வேறுபாடு காரணமாக உன்னைவிட்டுப் பிரிந்து போயிருக்கலாம். பழைய பாசம் விடாது. மறுபடியும் வந்து சேர்ந்துவிடுவார்கள். அவர்களை விலக்காதே. பொருள் கொடுத்தும் சேர்த்துக்கொள். பழைய உறவை மறந்து விடாதே. பழகியவர்கள் பண்போடு நடந்துகொள்வார்கள்.