பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
89


54. பொச்சாவாமை
(மறதி இன்மை)

களிப்புக்கடலில் கடமையை மறந்துவிடுவர். கடுஞ் சினம் தீது; அதுபோல் மிக்க மகிழ்ச்சியும் தீயது ஆகும். எதிலும் அளவு இருக்கவேண்டும்.

அறிவு மிக்கவன் என்று சொல்லிக்கொள்வான்; படிப்பாளிதான்; எனினும் அவன் எதனையும் செய்து வெற்றி காண்பது இல்லை; காரணம் பொருள் இல்லாமை; வறுமையில் அறிவு மங்கிவிடும். அதே போல எல்லா வசதிகளும் ஒருவன் பெற்று இருப்பான்; மறதி ஒன்று அனைத்தையும் செயலிழக்கச் செய்துவிடும்.

மறதி உடையவர் புகழ் தரக்கூடிய செயல்களைச் செய்ய முடிவது இல்லை; அவர்களுக்குப் புகழ் உண்டாவது இல்லை.

அச்சம் உடையவர்க்கு அரண்கள் இருந்தும் பயனில்லை; அதே போல மறதி உடையவர்க்கு எதுவும் கைகொடுக்காது.

வருமுன் காப்பவன் அறிவாளி; வந்தபின் சிந்திப்பவன் ஏமாளி; முன்கூட்டித் தடுக்காமல் போய்விட்டோமே என்று பின்னர் வருந்துவான்.

எங்கும் எவரிடத்தும் மறதி கூடாது; எப்பொழுதும் விழிப்புடன் செயல்படுதல் அவசியம் ஆகும்.

தக்க கருவிகளோடு மறதி இல்லாமல் செயல்பட்டால் செய்து முடிக்க முடியாத வேலை எதுவும் இருக்க முடியாது.