பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
90


எடுக்கும் பணி மிக உயர்ந்ததாக இருப்பது நல்லது. அதனைச் செய்யாமல் விட்டால் பிறகு எந்தக் காலத்திலும் வருந்திக் கொண்டே இருப்பர். நல்ல காரியங்களை உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும்.

மகிழ்ச்சியால் மயங்கிக்கிடந்து செய்ய வேண்டியவற்றை உரிய காலத்தில் செய்யாமல் புறக்கணித்துவிடுவர். இதனைப் போல் எதனையும் உதாசீனப்படுத்திக் கெட்டவரை நினைத்துப் பார்த்தால் அவர்கள் வாழ்க்கை ஒரு படிப்பினையாக இருக்கும்

நினைத்ததை முடிப்பது எளிது; எப்பொழுதும் அதனைப்பற்றியே இடைவிடாது எண்ணிச் செயல்பட வேண்டும். மறதியே கூடாது.

55. செங்கோன்மை

அரசனது நீதித்துறைபற்றிப் பேசுவது செங்கோன்மை யாகும்.

நீதித்துறையையும் அரசனே மேற்கொண்டிருந்தான். அவன் வைத்ததுதான் சட்டம்; சொன்னதுதான் தீர்ப்பு. அதனால் அவன் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்.

குற்றம் என்று தெரிந்தால், அவன் தான் பெற்ற மகனாயினும் தேர்க்காலில் இட்டுத் தண்டித்தது அந்தக் காலம். குற்றம் செய்தவன் யாராயினும் அவனைத் தண்டிப்பதுதான் நீதி, தானே தவறு செய்தாலும் கையைக் குறைத்துக்கொண்ட பாண்டியனும் இருந்திருக்கிறான். இரக்கம் காட்டினால் நீதி உறக்கம் கொள்ளும்.