பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
98

வேண்டும். எதிரிகள் இவர்களை எளிதில் விலைக்கு வாங்கி விடுவார்கள்; மகளிர் மயக்கத்திலும் தம்மை விற்றுக் கொள்வர். அதனால், இவர்கள் நடத்தையினையும் செயற்பாடுகளையும் அவர்கள் அறிய முடியாதபடி ஆராய்வது தக்கது ஆகும். ஒற்றர்களே சில சமயம் பகைவரிடம் காட்டிக் கொடுத்துவிடுவார்கள்.

ஒற்றனுக்குச் சீருடை தரக் கூடாது. அவர்கள் யார் என்பதை விளம்பரப்படுத்திக் கொள்ளும் முகவரி சட்டையில் ஒட்டிக்கொள்ளக் கூடாது. செயற்கு அரிய செயல்கள் செய்தார் எனினும் அவர்களுக்குப் பரிசோ பாராட்டுதலோ தந்து அதனால் அவர்களைப் பிரபல்யப்படுத்தக் கூடாது. அவர்களைச் சட்டைப் பையில் வைத்திருக்க வேண்டுமேயன்றிச் சட்டசபையில் கொண்டு வந்து நிறுத்தக் கூடாது. புகழ்பெற முடியாத துறை ஒன்று இருக்கிறது என்றால் இந்த ஒற்றாடல்தான். அஃது அவர்கள் உயிருக்கும் ஊறு விளைவிக்கும்; சுதந்திரமாக உலவ முடியாது; தான் எதனையும் அறிய முடியாமற் போய்விடும்.

60. ஊக்கம் உடைமை

செயலில் காட்டும் ஆர்வமும், அதற்காக எடுக்கும் விடாமுயற்சியும் ஊக்கம் எனப்படும். தொடர்ந்து செய்வதில் தளர்ச்சி காட்டாதிருத்தலும் ஊக்கத்தின்பால் படும்.

ஒரு காரியத்தைச் செய்து முடிக்கக் கருவிகள் இருக்கலாம்; முதற்பொருள் இருக்கலாம்; எடுத்த காரியத்தில் நம்பிக்கையும், விடாமுயற்சியும், மேலும் தொடர வேண்டும் என்ற செயற்பாடும் இல்லை என்றால் தோல்விதான் காண முடியும். அந்தச் செயற்பாட்டைத்தான் ஊக்கம் என்பர்.