பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
101


சோம்பலை முறியடித்துச் சுறுசுறுப்பாகச் செயல் பட்டால் விரைவில் முன்னேற்றம் காணலாம். அவன் குடும்பம் உயர்ந்துவிடும். அவன் ஆண்மை மிக்கவன் என்று மற்றவர்களும் பாராட்டுவார்கள்.

சோம்பல் காட்டாத மன்னன் முயன்றால் இந்த உலகத்தையே தன் அடிக்கீழ் கொண்டுவர இயலும்.

62. ஆள்வினை உடைமை
(செயலாற்றும் திறன்)

“இது நம்மால் முடியாது” என்று அவநம்பிக்கை கொள்ளத் தேவை இல்லை; முயன்று பார்; வெற்றி உன் காலடியில் வந்து விழும்.

ஒரு காரியத்தை எடுத்தால் சோர்வு காரணமாக ஒரு சிலர் விட்டுவிடுவதும் உண்டு. அஃது அவர்தம் ஆண்மைக்கு அழகு அன்று. எடுத்த காரியத்தை முடிப்பது தான் அரசனுக்குப் பெருமை தரும்.

எவனொருவன் விடாமுயற்சி கொண்டு உழைத்து முன்னேறுகிறானோ அவன்தான் தாராள மனப்பான்மை கொள்ள முடியும்; தன்னை வந்து அணுகுபவருக்கு உபகாரமும் செய்ய முடியும். உழைத்து உயராதவன் உபகாரமும் செய்ய இயலாது. பேடி தன் கையில் வாள் எடுத்தால் வேடிக்கையாக இருக்குமே தவிர வீரம் அங்கு விளையாடாது.

இன்பம்! அதனைத் தேடிச் செல்லமாட்டான்; செயல் மீது நோக்கம் வைப்பான்; அவன்தான் சுற்றத்தினரின் துன்பத்தைத் துடைக்கமுடியும்; தூணாக நின்று அவர்கள் சார உதவுவான்.