பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
116


நுண்ணிய அறிவுடைய அமைச்சன், அரசன் கண்ணியது அறிய அவன் கண்களை நோக்கினால் அதுவே போதும். எனவே குறிப்பறிந்து செயல்படுபவனே அறிவுள்ள அமைச்சன் ஆவான்.

மனிதன் அறிவு நிரம்பியவன்; எதனையும் குறிப்பாக அறிவிக்கும் ஆற்றல் உடையவன்; எத்தகைய உணர்வுகளையும் ஒருவர் கண்களைக்கொண்டே நோக்கி அறிந்து கொள்ள முடியும். பார்வை ஆற்றல் மிக்கது; நுட்பம் வாய்ந்தது; குறிப்புகளை உணரவும் உணர்த்தவும் வல்லது ஆகும்.

72. அவை அறிதல்
(சபை அறிதல்)

அவையின் நடைமுறைகளை அறிந்துகொண்டு பொருத்தமான கருத்துகளைக் கூறுக; இடைஇடையே குறுக்கிட்டுப் பேசுவதைத் தவிர்க்க; பிறர் மனநிலையை அறிந்துகொண்டு தக்க சமயத்தில் தேவையான கருத்துகளைக் கூறுக; அவை அறிந்து முறைப்படிப் பேசுக. அப்பொழுதே கற்றவர் என்று உன்னைக் கருதி மதிப்பர்.

அறிவு மிக்கவர் மத்தியில் உன் அறிவுத் திறனைக் காட்டுக; அங்கு ஒளி பெற முயற்சி செய்க, சாமானியர் மத்தியில் உன் நூலறிவைக் கொண்டு திணிக்காதே; ஒன்றும் தெரியாதவர் போல் நடித்துப் பழகிக்கொள்; அவர்களுள் ஒருவனாக இருக்க முயற்சி செய்க.

அறிவு மிக்க சான்றோர் கூடிய அவையில் அடக்கம் மேற்கொள்வது தக்கது. தேவை இல்லாமல் முந்திக்கொள்ள வேண்டா. அவர்கள் பேசுவதைக் கவனி; அதுவே அவர்களுக்குச் செய்யும் மரியாதையும் ஆகும்.