பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
127

உயிர் பெரிது அன்று: அக் கழல் அவனுக்கு அழகு செய்கிறது.

போர் தொடங்கிய பிறகு உயிர் இழப்புக்கு அஞ்சி அரசன் நின்று தடுத்தாலும் அதனைக் கேளாமல் களத்துக்குச் செல்லும் மாவீரம் அதுவும் படைச்செருக்கு ஆகும்.

வஞ்சினம் கூற, அதன் விளைவால் போர் தொடுத்து உயிர்விடும் வீரன் அவன்மீது யார் நடவடிக்கை எடுக்க முடியும்? யாரும் ஏன் இப்படிச் செய்தாய் என்று விசாரிக்க முடியாது. வஞ்சினம்தான் தனக்குப் பெருமை என வாழ்வான். இதுவும் படைச்செருக்கு ஆகும்.

தன்னை ஆளாக்கிப் போர்க்களத்துக்கு அனுப்பி வைத்த தலைவனுக்காக உயிர்விடுகிறான்; அவன் இறப்புக்கு வருந்திக் கண்ணிர்விடுகிறான் தலைவன். அந்தக் கண்ணிருக்காக விரும்பி மரணத்தை ஒருவன் ஏற்கலாம்; அது பெருமை தரக்கூடியது. இதுவும் படைச் செருக்கு ஆகும்.

79. நட்பு

‘நள்’ என்ற சொல்லே நட்புக்கு அடிச்சொல்; நண்ணுதல் என்பதும் இதன் அடியில் எழுந்தது.

நிறைமதி போன்று நாளும் வளர்வது உயர்நட்பு ஆகும்.

தீய நட்புத் தேய்பிறை போன்றது; உணர்ச்சிதான் நட்பாகும் உறவைத் தரும்; பழகிக்கொண்டே இருக்கத் தேவை இல்லை.