பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
141

கொள். அந்த உறவு தற்காலிகமாகவாவது இருக்கட்டும்; நிலையானது ஆகவாவது இருக்கட்டும்.

நண்பனாகக் கொள்கிறாயோ வேறுபட்டு இயங்குகிறாயோ உனக்கு அழிவு வரும் காலங்களில் அவர்களோடு எந்த உறவும் புதுப்பிக்காதே; நடுநிலைமையில் இருந்து அவர்களைச் சாராமல் இருக்க வேண்டும்.

நண்பன் உன் துன்பத்தை அவனாக அறிந்துகொள்ள வேண்டும்; உன் கஷ்டங்களை அவனிடம் எடுத்து உரைக்காதே; அதேபோல உன் எதிரியிடமும் உன் மெலிவுகளைக் கூறாதே.

செயல்படும் வகை அறிந்து, தன்னை வலிமைப் படுத்திக்கொண்டு தற்காப்பு ஆராயும் இயல்பினர் பகைவரின் செருக்கை அடக்க முடியும்.

முள்மரத்தைத் தொடக்கத்திலேயே களைக; முற்றிய பிறகு களைவது கடினம்; கையை அந்த முள் வருத்தும்.

பகை பெரிது; தீது என்று தெரிந்தும் புறக்கணித்து விட்டால் எதிரிகள் தக்க சமயம் பார்த்து உன்னை ஒழித்துவிடுவார்கள்.

89. உட்பகை

நிழலும் நீரும் இனியன; அவையே நோய் செய்யும் எனின் கடுமைய; ஆரோக்கிய வாழ்வுக்கு இவற்றினின்று விடுபடலே நல்லது ஆகும்.

வாளைப் போன்ற பகைவர்களை விடக் கேளிரைப் போல் நடந்து உறவாடிக் கெடுப்பவர்கள் தீயவர்கள்; தேளைப்போல் கொட்டிக்கொண்டே இருப்பர்.