பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
147

பட்டேன்; புளிகரைத்து ஊற்றுவாய் என்று எதிர் பார்க்கவில்லை” என்கிறாள்.

கட்டிய வேட்டி அவிழ்ந்துவிடுகிறது; ஜட்டியோடு தடுமாறுகிறான். வெட்கம் அவனை விட்டு வெளியேறி விடுகிறது. மானம் ஈனம் அது எதுவும் இல்லை. நிதானம் தவறிவிட்டான்: ஈன புத்தியோடு ஞான நன்னெறி பேசி உளறுகிறான்.

புளிக்கும் கள்ளைக் களிப்புத் தரும் என்று குடிக்கிறான். அது விஷம்; விஷமத்தனத்துக்கு அது வித்தாகிறது.

ஏன்? மற்றவர்கள் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். உடம்பெல்லாம் புழுதி, கண்டபடி உளறுகிறான். அவன் எள்ளல் பொருள் ஆகிறான்.

நீரில் முழுகியவனை எடுத்துவிடலாம்; குடியில் முழுகியவனைத் தெளிவுபடுத்தி மீட்க முடியாது.

குடிகாரன் எப்படி இருப்பான் என்பதனை அறிய ஒரு குடிகாரனின் ஆட்டத்தைக் கவனி; அதற்குப் பிறகு குடியை நாடுவதை நீ நிறுத்திவிடுவாய்.

94. சூது
(சூது ஆடுதல்)

‘வா வா’ என்று அழைக்கிறது; வெற்றியும் தருகிறது. ஒன்று வைத்தால் பத்துக் கிடைக்கிறது. இந்தப் பத்துதான் உன் சொத்தை இழக்கும் வித்து ஆகிறது; தூண்டில் முள்; அதில் உள்ள புழு அதனைத் தின்ன மீன் தாவுகிறது.