பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3


கார் காலத்து மழை பெய்யாவிட்டால் ஏர் பிடித்த உழவன் என்ன செய்ய முடியும்? உழவும் வேறு வழி யில்லாமல் அழிவுதான் பெற வேண்டும்.

ஆவதும் அழிவதும் மழையாலே, மழையின் துளி விழவில்லை என்றால் பசும்புல்லும் தலை காட்டவே காட்டாது.

ஆழநீர்க் கடல்தான்; அதுவும் மழை இல்லாவிட்டால் பாழ்பட்டுப் போகும்; அதன் தன்மை திரியும்; அழுகிவிடும்; மழைநீரே அதனைப் புதுப்பிக்கும்.

வானம் வறண்டுவிட்டால் தானம் இல்லை; தருமம் இல்லை; கோயில் இல்லை; பூசை இல்லை; மணி ஓசையும் இல்லை.

நீர் இல்லை என்றால் உயிர் வாழ்க்கை இல்லை; அதன்பின் அவரவர்தம் ஒழுக்கம் கடைப்பிடிக்க இயலாது; அறத்துப் பாலே மழைக்கு அப்பால்தான்.

3. நீத்தார் பெருமை

துறவிகள் உலகத்து உறவினை நீத்தவர்கள்; அவர்கள் பெருமையை அற நூல்கள் ஓதிக்கொண்டே இருக்கின்றன.

செத்தவர் இதுவரை எத்தனை பேர்? எண்ணிச் சொல்ல முடியாது; துறவிகளின் உயர்வை யாவராலும் அளந்து கூற முடியாது.

துறவிகளின் தூய ஒழுக்கம் அவர்களுக்குப் பெருமை சேர்க்கிறது; இத் துறவிகள் சிலராவது இருப்பதனால்தான் உலகம் உயர்வு பெறுகிறது. பெருமை கொள்கிறது.