பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
160

வேறுபாடுகள் இல்லை. நாண் உடைமையே மாந்தர்க்குச் சிறப்புத் தருவதாகும். தவறு செய்யப் பின்வாங்கும் நல்லியல்பு அவர்களுக்குப் பெருமை சேர்க்கிறது.

உடம்புக்கு உணவு தேவை. அதுபோலச் சான்றாண்மைக்கு நாணம் அடிப்படையாகும்.

நாண் உடைமை அவர்கள் அணிகலம் ஆகும். அது மட்டும் அன்று; நாண் இல்லை என்றால் அவர்கள் பெருமித நடை அவர்களுக்குப் பிணியாகும்.

பிறருக்கு ஏற்படும் பழிக்கும் தனக்கு அதனால் உண்டாகும் இழிவுக்கும் ஒப்ப நாணுபவரே சான்றோர் எனக் கொள்ளப்படுவர். “பழி மற்றவர்களைச் சாரும்; நாம் தப்பித்துக் கொள்ளலாம்” என்று தவறு செய்வதும் பிழை ஆகும்.

நாண்மா நாணயமா என்றால் நாணத்தையே நல்லோர் ஏற்பர். காசு இன்று இருக்கும்; நாளை போகும்; அதனை ஏற்பது மாசு, நாணமே மக்கள் வாழ்வுக்கு ஆசு; அதனால் இல்லை அவர்களுக்குப் பிறர் கூறும் ஏசு.

நாணத்தை மேற்கொள்பவர் உயிரையும் நாணத்தின் பொருட்டுத் துறப்பர்; உயிருக்காக நாணத்தைத் துறக்க மாட்டார். உயிரைவிட நாணம்தான் அவர்களுக்குப் பெரிது.

பிறர் நாணத்தக்க செயலுக்குத் தான் நாணாவிட்டால் அறமே வெட்கித் தலைகுனிய வேண்டியதுதான். அறம் தாழ்ந்துவிடும்; ஒழுக்கம் கெட்டால் குடி கெட்டுவிடும்; குலம் தாழும்; நாணம் கெட்டால் நன்மைகள் அழிந்து விடும்.