பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
172


“அவள் கண்களுக்குமேல் புருவங்கள் வளைந்து எங்கள் இருவருக்கும் இடையே இடப்பட்ட கேடயமாக விளங்குகிறது. அஃது அவள் பார்வையின் கூர்மைக்குத் தடுப்பாக உள்ளது.”

“அவள் தாவணி அணிந்திருக்கிறாள். அஃது என்னைத் தாவி அணைக்காமல் தடுத்து நிறுத்துகிறது யானைக்கு முகபடாம் ஏன் அணிவிக்கிறார்கள்? என்பது இப்பொழுது தான் விளங்குகிறது.

“களம் கண்ட வீரன் நான்; அவள் என் உளம் கொண்டு விட்டாள்; பீடு அழிந்து நிற்கின்றேன்; அவள் காதலுக்கு என் பெருமையை ஈடு கொடுத்துவிட்டேன்.”

“அவள் நாணமும், மான்போன்று மருளும் பார்வையும் அவளுக்கு அழகைத் தருகின்றன. கூடுதலாக அணிகலன்கள் வேறு எதற்கு அணிகிறார்கள்? நகை அவளுக்கு மிகை.”

“கள் உண்டால்தான் மயக்கும்; காதல்! அது கண்டாலே போதை தருகிறது. வெறி ஊட்டுவதில் இரண்டும் நிகர் என்று கூறலாம்.”

110. குறிப்பு அறிதல்

தலைவன் கூற்று

“காதல் நோயை உண்டாக்கியதும் அவள் பார்வை தான்; வேதனைப்படுத்தியதும் அதன் விளைவுதான். பின் காதலைத் தொடர்ந்து செய்ய உதவியதும் மீண்டும் அவள் பார்த்த பார்வையே. இருநோக்கு இவள்கண் உள்ளது. ஒன்று நோய் நோக்கு மற்றொன்று அது தீர்க்கும் மருந்து.”