பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5

பூண்டவர்கள்; இவர்களும் நீத்தார் என்றே மதிக்கப் படுகின்றனர்.

பற்றுகளை விட்டு அறவாழ்க்கையும், ஒழுக்க உயர்வும் கொண்டவர்கள்; இவர்கள் துறவிகள், சான்றோர், பெரியோர், அறிஞர், அந்தணர் என்று அவரவர் தவ ஒழுக்கத்துக்கு ஏற்ப அழைக்கப்படுகின்றனர். கடவுள், மழை இவற்றிற்கு அடுத்து மதிக்கத் தக்கவர்கள் இவ்வொழுக்கத்தில் உயர்ந்த பெரியோர்கள்.

4. அறன் வலியுறுத்தல்

அறத்தின் காவலர்கள் துறவிகள்; சான்றோர் காட்டும் நெறியில் வாழ்வதே அறமும் ஆகும்.

உயிர்க்கு ஆக்கம் தருவது அறம்; அதனால் உயர் சிறப்புகள் சேர்கின்றன. செல்வமும் சேர்கிறது; இதனை விட நன்மை தருவது வேறு ஒன்றும் இருக்க முடியாது; அறமே எல்லா நன்மைகளுக்கும் காரணம் ஆகிறது.

அறத்தைக் கடைப்பிடி; ஆக்கம் உண்டாகும். அதனைக் கைவிட்டால் வாழ்க்கையில் தேக்கமே ஏற்படும். நன்மைகளின் நீக்கம் தொடரும்; கேடுகள் உன்னைத் தேடி வரும்.

இயன்றவரை அறம் செய்க; வாய்ப்புகளைத் தவற விடாதே; விடாது அறம் செய்க.

அறம் என்பது யாது? அது புறத்தில் இல்லை; உன் அகத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்; மனத்துக்கண் மாசு இல்லாமல் தூயதாக வைத்துக்கொள்; அதுவே அறம் ஆகும். ஏனைய செயல்கள் வீண் ஆரவாரம் ஆகும்.