பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
188


“அவர் எனக்கு அருள் செய்யாமல் இருக்கலாம்; அவர் கடமை காரணமாக அடையும் வெற்றி புகழைச் சேர்க்கிறது; அஃது எனக்கு இனிக்கிறது.”

“நெஞ்சமே! உன் மடத்தனத்துக்கு இரக்கப் படுகிறேன். உன்னோடு உறவு கொள்ளாதவரிடம் ஏன் துன்பத்தைக் கூறுகிறாய்? வீண் முயற்சி; அதனைவிட இந்தக் கடலையே நீ தூர்த்துவிடலாம். அரிய சாதனையாக அமையும்.”


121. நினைந்து அவர் புலம்பல்
(தலைவனை நினைத்துத் தலைவி தனிமையில் வருந்துதல்)


தலைவி கூற்று

“நினைத்தாலும் மகிழ்வு செய்வது காமம்; அதனால் கள்ளினும் காமம் இனிது.”

“பிரிவிலும் பழைய இன்ப நினைவுகள் இன்பத்தைக் கூட்டுகின்றன.”

“தும்மல் வருகிறது; அடங்கிவிடுகிறது! காதலர் நினைக்கிறார்; உடனே அதனை நிறுத்திவிடுகிறார் போலும்.”

“என் நெஞ்சத்தில் அவர் நிலைத்து இருக்கிறார்; அது போல அவர் நெஞ்சில் எனக்கு இடம் தருகிறாரா? தெரியவில்லை.”

“அவர் நெஞ்சில் இடம் கொடுக்க மறுப்பவர், எந்த முகம் கொண்டு என் நெஞ்சில் இடம் கேட்டுப் பெறுகிறார்?"