பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
191


“மாலையே நீயும் வருந்திக் காணப்படுகிறாயே! நீயும் உன் காதலனைப் பிரிந்துவிட்டாயோ?.”

“பனி அரும்பிய மாலைப்பொழுது; அப்பொழுது என் காதலர் உடன் இருந்தார்; இனிதாக இருந்தது; அஃது ஏன் இப்பொழுது தனிமையைத் தருகிறது?”

“காதலர் இல்லை என்றால் மாலைப்பொழுது முன் பின் பழக்கமில்லாத கொலையாளி போல வந்து அச்சுறுத்துகிறது.”

“காலை எனக்கு நண்பனாக இருக்கிறது; மாலையே நீமட்டும் ஏன் பகையாக மாறுகிறாய்?”

“மாலை இந் நோய் செய்யும் என்பதனை அவருடன் இருந்தகாலை யான் அறிந்தது இல்லை.”

“இப் பிரிவுநோய் காலையில் அரும்புகிறது; பகலில் முகை ஆகிறது; மாலையில் மலர்கிறது.”

“மாலை நெருப்பு என்றால், குழல் ஒசை அதனை அறிவிக்கும் தூதாக முன் வந்து ஒலிக்கிறது; இஃது எங்களைக் கொல்கிறது.”

“நான்மட்டுமா வருந்துகிறேன்; இந்த ஊரில் பிரிந்த மகளிர் எல்லாம் என்னைப் போல்தான் இந்த மாலைக் காலத்தில் தனிமை உற்று வருந்துகிறார்கள்.”

“பொருளைத் தேடி அவர் சென்றுவிட்டார்; அவர் அருளை நாடி நான் இங்கு ஏங்குகிறேன். இருளைத் தேடிவரும் மாலையே! நீ வந்து எனக்கு மருளைத் தருகிறாய்."