பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/212

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
198


“மலைநாட்டுத் தலைவன் நம்மை அறிவுறுத்திப் பிரிய நினைப்பதனை என்னைவிட என் வளையல்கள் அறிந்துகொண்டன; அவை நிலைகொள்ள மறுக்கின்றன.”

“நேற்றுதான் அவர் என்னைவிட்டுப் பிரிந்தார். ஏழு நாள் ஆகிவிட்டது போல் ஆகிவிட்டது; பசலையும் மேனியில் இடம் பெற்றுவிட்டது.”

தலைவன் கூற்று

“கைவளையல்களை நோக்கினாள்; தன் மெல்லிய தோளைக் குறிப்பாகக் காட்டினாள்: கால் அடி நோக்கினாள். அவள் உணர்த்தும் செய்தி யாது? பிரிவு தாங்க இயலாது; செலவுதவிர்ப்புதான் வழி என்பதனை உணர்த்திவிட்டாள்.”

கவிஞன் கூற்று

“தான் உற்ற காம நோயை யாருக்கும் எடுத்து உரையாத மனநிலை பெண்மைக்கே உரியது; அது பெண்மைக்குச் சிறப்புச் சேர்க்கிறது; கண்ணினால் தான் கருதியதைக் காதலனுக்கு உணர்த்தும் குறிப்பு அவளுக்கு உண்டு; அஃது அவளுக்குப் பெருமை சேர்க்கிறது.”


129. புணர்ச்சி விதும்பல்
(சேர்க்கையை விரும்புதல்)

கவிஞன் கூற்று

“நினைத்தாலே இன்பம் தருவது; காண மகிழ்வு தருவது காமம்; அந்த இயல்பு கள்ளுக்கு இல்லை."