பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/215

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
201

கவலைப்படுகிறாய். அடைந்த பிறகு அவர் பிரிந்துவிடக் கூடும் என்று அஞ்சுகிறாய்; உன்னை எப்படித் திருத்துவது என்பதே தெரியவில்லை?”

“என் தனிமையில் நீ எனக்குத் துணை இருப்பாய் என்று நினைத்தேன்; என்னைப் பிய்த்துத் தின்கிறாய் அவரை அடைய வேண்டும் என்று; நிம்மதியாக என்னை விட மறுக்கிறாய்.”

“அவரை மறக்க முடியாத பாழ் நெஞ்சோடு சேர்ந்து நான் என் நாணத்தையும் மறந்துவிட்டேன்; அதனைப் போலவே அவரிடம் தாவ விழைகின்றேன்.”

“காதலை உயிராக மதிக்கும் என் நெஞ்சு அவரை மறக்க முடியாமல் அவரையே நினைத்து வேதனைப் படுகிறது; இதனைத் தடுக்க முடியாது.”

“துன்பத்திற்கு யாரே துணையாக முடியும்? அவரவர் நெஞ்சுதான் உற்ற துணையாக இருந்து உதவ முடியும்!”

“நம் நெஞ்சமே தக்க துணையாக இல்லாதபோது அயலார் வந்து உதவுவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?”


131. புலவி
(ஊடல் கொள்ளுதல்)

கவிஞன் கூற்று

“குழந்தையைச் சற்றுக் கிள்ளினால்தான் அஃது அழும்; அந்த அழுகை சுவைக்கத் தக்கது. சிறிது சீண்டினால்தான் சுவாரசியமே அமையும்; ஊடல் அதனைத் தூண்டிவிடுகிறது.”