பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12

சபையில் பற்பல பேசித் தன் புலமையையும் அறிவையும் காட்டும் மகன் தன் தந்தைக்கு மிகவும் கடமைப்பட்டவன் ஆகிறான். ஒவ்வொரு தந்தையும் தன் மகனைச் சபையில் முந்தி இருக்கச் செய்ய வேண்டும்; அதற்குத் தக்க கல்வியையும் தகுதியையும் உண்டாக்கித் தரவேண்டும். அஃது அவர் கடமையாகிறது.

‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்’ என்பர். மகன் தந்தையைவிட அறிவாளி என்று பெயர் எடுப்பதுதான் தந்தைக்குப் பெருமை; உலகத்துக்கும் நன்மை.

பெற்றவள் கற்ற தன் மகனைச் சான்றோன் எனப் பிறர் பாராட்டினால் அதனைக் கேட்டு ஈன்ற ஞான்றினும் பேரு வகை கொள்கிறாள். அதே போலத் தந்தை அவன் வளர்ச்சி கண்டு மனக்கிளர்ச்சி பெறுகிறார். “இவனைப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ?” என்று உலகம் பாராட்டினால் அது போதும்; நற்புகழ் எய்தி நானிலம் மதிக்க மகன் வாழ்ந்தால் அதுவே அவன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு ஆகும். காசு பணத்துக்காக அந்தத் தந்தை தம் மகனிடம் கையேந்தி நிற்கமாட்டார்; மாசில் புகழ் வந்து அடையத் தம் மகன் திகழ்கிறான் என்றால் அவர் அக மகிழ்வு பெறுவார்.

8. அன்புடைமை

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பு உடையது; பயன்மிக்கது என்பர். இல்வாழ்க்கையில் அன்பு வளர்கிறது; அன்புடைமையே எல்லா உயிர்வாழ்க்கையின் இயக்கமும் ஆகும்.