பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
37


பண்பு மிக்கவர்கள் நன்மை தரும் சொற்களைப் பேசாவிட்டாலும் பயனற்ற சொற்களைப் பேசினால் அவர்க்கு அஃது இழுக்கு ஆகும்.

ஆழமான கருத்துகளை ஆராயும் அறிவு உடையவர் பயன் ஏதும் விளைவிக்காத வெற்றுப் பேச்சுப் பேசித் தம்மைத் தாழ்த்திக்கொள்ள மாட்டார்கள்.

மயக்கம் நீங்கிய தெளிந்த அறிவு உடையவர்கள் பொருளற்ற வெற்றுரைகளை மறந்தும் பேசமாட்டார்கள்.

வாய் திறந்து பேசினால் அதிலிருந்து வெளிவரும் சொற்கள் பயனுடையவையாக இருக்க வேண்டும்; வெற்றுப் பேச்சுப் பேசுவது வீணாகும்.

21. தீவினை அச்சம்

தீயவர்கள் தீமை செய்யத் தயங்குவது இல்லை; சொல்லி முடிப்பதற்குமுன் தீமைகளைச் செய்து முடித்து விடுவார்கள். நல்லவர்கள் தீமை செய்ய அஞ்சுவர்; அந்த நினைப்பே அவர்களை அச்சுறுத்தும்.

ஒரு தீமை மற்றைய தீமைகளுக்குக் காரணம் ஆகிவிடுகிறது; சிறு பொறி பெரு நெருப்பாகிவிடுகிறது. அதனால் தீமையை நெருப்பு எனக் கருதி விலக்குக.

பகைவன் என்றாலும் அவனுக்குத் தீமை கருதாதே. அழிவு அழிவுதான் பொருள் நஷ்டம் உலகத்துக்கு இழப்பு.

மறந்தும் பிறருக்குக் கேடு செய்ய நினைக்காதே; அறம் உனக்கு அழிவை உண்டாக்கிவிடும்; கெடுவான் கேடு நினைப்பான்.