பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
38


காசு இல்லை; தீமை செய்தால் தன் வறுமை தீரும் என்று கருதாதே. காசும் வாராது; வறுமை முன்னைவிட அதிகமாகும்.

நீ நிம்மதியாக வாழ வேண்டும் என நினைத்தால் வீண் வம்புகளை விலைக்கு வாங்காதே; மற்றவர்களுக்குத் தீமை செய்யாதே.

நீ மற்றவருக்குத் தெரிந்து தீமை செய்யாதே; அவர்கள் வஞ்சம் வைத்துப் பழிதீர்ப்பர்.

உன் நிழல் உன்னைத் தொடராமல் விடாது; நீ செய்த தீமையின் விளைவும் உன்னைத் தொடராமல் இருக்காது.

உன்னை நீ நேசித்தால், நீ தொல்லை இல்லாமல் வாழவேண்டும் என்று நினைத்தால், பிறர் உனக்குத் தீமை செய்யக் கூடாது என்று கருதினால் தீய செயல்களைச் செய்ய நினைக்காதே.

நீயாகச் சென்று தீமைகளைத் தேடிக்கொண்டால் அதற்கு நீதான் பொறுப்பு; தீயது நாடாதே; தெரிந்து அழிவைத் தேடாதே.

22. ஒப்புரவு அறிதல்

வானம் மண்ணுக்கு மழை வழங்குகிறது; அஃது எந்தக் கைம்மாறும் எதிர்பார்ப்பது இல்லை; இதற்குத்தான் உபகாரம் என்று பெயர்.

உபகாரம் செய்யும் மன இயல்பு உடையவன் அந்த உயர்ந்த இலட்சியத்துக்காகவே பொருள் ஈட்டுவான்; பிறர் துயரைக் களைய முன்வருவான்.