பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
42


உன் புகழ் திக்கெட்டும் பரவட்டும்; அது வானவர் செவிக்கு எட்டும்; அவர்களும் உன்னைப் பாராட்டிப் புகழ்வர்.

உலகத்தில் பிறந்தால் புகழ்பட வாழ வேண்டும்; அஃது இல்லாமல் வாழ்வது வீண் சுமையாகும். மற்றும் எந்தத் தொழிலை மேற்கொண்டாலும் அதில் நீ சிறந்து விளங்கி நற்புகழைத் தேடவேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பொறுப்பை ஏற்பதில் பொருள் இல்லை.

வாய்ப்பு ஒரு முறைதான் வரும்; அதனைத் தவற விட்டால் மறுபடியும் அது வாய்க்காது. புகழுக்குரிய செயல்களைச் செய்து நன்மை பெற முயல வேண்டும்: எதுவுமே செய்யாமல் மற்றவர்கள் தம்மைப் புகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது மடமையாகும்.

இசைபட வாழ முயல வேண்டும்; வசைபட வாழ்வது பயனற்றதாகும். நீ வாழ்ந்த பிறகும் உன்னைப்பற்றி வகையாகப் புகழும்படி வாழ வேண்டும்.

பாட்டுக்குப் பண் இனிமை கூட்டுவதுபோல் வாழ்வுக்குப் புகழ் உயர்வு சேர்க்கும். இசையற்ற வாழ்க்கை இனிமை பயக்காது.

பழி நீங்கி வாழ்பவரே வழியறிந்து வாழ்பவராவர்; புகழ்பட வாழ முயல்க.

25. அருளுடைமை

அன்பு அருளாக மலர்கிறது; இதை மனித நேயம் என்று கூறலாம். அருட்செல்வம் மதிக்கத் தக்க செல்வ