பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50


ஒருவன் நினைவிலும் பொய் நீங்கி வாழ்வானாகில் அவன் உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் நிலைத்து இருப்பான். அவன் வாய்மையை விரதமாகக் கொண்டு ஒழுகுவான் ஆகில் தவமும் தானமும் செய்பவர்களைவிட மேலானவன் ஆவான்; பொய்யே பேசாது இருந்தால் அஃது அவனுக்குப் புகழைத் தரும்.

பொய்மை என்பதனை அறமாக மேற்கொண்டு அதனை முழுவதும் கடைப்பிடித்தால் அவன் வேறு எந்த அறத்தையும் பின்பற்றத் தேவையில்லை; இதிலேயே எல்லா அறங்களும் அடங்கிவிடுகின்றன.

உடம்பைத் தூயதாக வைத்துக்கொள்ள நீர் ஒன்றே போதும்; அதுபோல மனத்துய்மை வாய்மையால் அமையும். புற இருளை விலக்குவதற்கு எரிவிளக்குகள் தேவைப்படும்; அகி இருளைப் போக்குவற்குப் பொய்யாமை ஆகிய விளக்கு அவசியம் ஆகும். இதற்கு மற்றைய விளக்குகள் பயன்படா.

எண்ணி எண்ணிப் பார்த்தால் வாய்மையைத் தவிர வேறு எந்த அறமும் சிறந்தது என்று கூறமுடியாது.

31. வெகுளாமை

வெகுளுதல் என்றால் அருவருத்துக் கோபித்தல். பிறரை வெறுப்பதாலேயே சினம் தோன்றுகிறது. வெறுப்பே சினத்துக்குக் காரணம் ஆகிறது.

சினம் பொல்லாதது; அது நம் சீர்மையைக் கெடுக்கும். நம்மைவிட எளியவரிடத்துக் கோபம் கொள்கிறோம்; நம்மைவிட வலியவரிடத்து அடங்கி இருக்கிறோம்.