பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
54

தான் பெற்ற அறிவினால் என்ன பயன்? அறிவாளிக்கும் முட்டாளுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

துன்பம் என்று தெரிந்தால் எந்த அளவும் யாருக்கும் மனமறிந்து செய்யாமல் இருப்பதுதான் சிறந்ததாகும்.

பிறர்க்குக் கெடுதி நாம் முன் ஒருநாள் செய்தால், பின் ஒருநாள் நமக்கு அத் துன்பம் தானே வரும்; தப்பித்துக் கொள்ள முடியாது.

நீ ஒருவருக்கும் துன்பம் செய்யாமல் இரு. யாரும் உனக்குப் பகை என்று தோன்றமாட்டார்கள். உனக்கு எந்தத் துன்பமும் வாராது. நீ யாரையும் கெடுக்காதே; உன்னை யாரும் கெடுக்க நினைக்கமாட்டார்கள். நல்லது செய்ய இயலவில்லை என்றாலும் தீயது செய்வதைத் தவிர்க்கவும்.

33. கொல்லாமை

கொலை நிகழ்ச்சி ஏன் பொதுவாக நிகழ்கிறது? பொருள் அற்ற நிலைதான்; வாழ வழியில்லாவிட்டால் அவன் வன்முறையை நாடுகிறான்; இஃது அரசியல் சீர் குலைவால் ஏற்படும் நிலை; பகுத்து உண்டு பலரும் வாழ வேண்டும் என்ற சமுதாய நல்வாழ்வுக் கொள்கை பரவாதிருக்கும்வரை கொலை நிகழ்ச்சிகளைத் தவிர்க்ச இயலாது.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்; மனிதன் மிருகமாக மாறிவிடுவான்: அதனால் கொலையைத் தவிர்க்க அறிவுடையார் சிந்திக்க வேண்டிய அறக்கொள்கை இது.