பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
59

கணக்குத் தேவை இல்லை; உண்பது ஒருவேளை: உடுப்பது நான்கு முழம்; எளிமை அவன் பின்பற்றும் வழியாக இருக்கவேண்டும். செல்வ வாழ்வின் சுகபோகங்களுக்கு அடிமையாகாமல் தொண்டு வாழ்க்கையில் அமைதியும் இன்பமும் காணவேண்டும். எந்தக் காரியம் செய்தாலும் அதில் பற்றுக் காட்டாமல் செயல்பட வேண்டும்.

பற்றுகள் நீங்குவது எளிதன்று; உலகப் பற்றுகள் நம்மைவிட்டு விலக மேலான ஒரு பொருளைப் பற்றிக் கொள்ளவேண்டும். அதனைப் பரம்பொருள் என்று கூறலாம். இறைப்பற்று மிகுந்தால் இந்தப் பாசச்சிறை கழன்று விடுதலை பெறமுடியும்; பிறப்பு என்னும் தளையினின்றும் விடுபடலாம்.

36. மெய்யுணர்தல்

“கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதுதான் மெய்” என்பர்; பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்பது ஒருவகை மயக்கம். அதனால் தளைகள் ஏற்பட்டுவிடுகின்றன. இத்தயை மயக்கத்தினின்று விடுபட்டுத் தெளிவான அறிவு படைத்தவருக்கு அறியாமை நீங்கும்; இன்பம் நிலைக்கும்; காணும் வடிவம் சிலையோ, மகனோ என்று முதலில் நினைப்பது ஐயம்; பிறகு இது சிலை வடிவிலான உருவம் என்று காண்பது தெளிவு. இதேபோல் உலகத்தில் காணும் பொருள்களைப் பிரித்து அறியவேண்டும். ஐயம், திரிபு, மயக்கம் இம் மூன்றினின்றும் விடுபடுவதே மெய்யறிவு எனப்படும்.

இவை நம்மை மயக்குகின்றனவா? அரியாமையில் ஆழ்த்துமா? அறிவுக்கு வழிகூட்டுமா? என்று ஆராய