பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
73

இல்லாத மகிழ்ச்சியும் என்று கூறலாம். மகிழ்வு கொள்வது அளவாக இருக்கவேண்டும். மகிழ்ச்சியில் கடமைகளை மறக்க வாய்ப்பு நேர்கிறது.

பழிக்கு நாணுபவர் தினை அளவு குற்றம் நேரும் என்றாலும் அதனைப் பனையளவாகக் கொண்டு தவிர்ப்பர்.

குற்றம் வாராமல் காத்துக்கொள்க; குற்றமே அழிவைத் தரும் பகையாகும். வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன் வைத்த வைக்கோல் போலக் கெடும்.

முதலில் தன் குற்றத்தை ஆராய்ந்து நீக்குக; பின் பிறர் குற்றம் காண்க. அரசன் இவ்வாறு தன்னை முதலில் தூயனாக வைத்துக்கொள்வது அவசியமாகும்; அவனுக்கு எந்தத் தீமையும் வாராது.

செலவு செய்ய வேண்டியது அவசியம் என்றால் அதனை மிச்சப்படுத்துவது அறிவீனம். அத்தகையவன் செல்வம் அழிந்து நீங்கிவிடும்; அதன் அழிவை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. பொருள் தாராவிட்டால் யாரும் அவனுக்கு உதவமாட்டார்கள்.

எக்காலத்திலும் தன்னைத் தான் புகழ்ந்து பேசுவதைத் தவிர்க்கவும்; நமக்கு நன்மை தாராத செயல்களை எப்பொழுதும் செய்யக்கூடாது. சில இன்பங்களைத் துய்ப்பதிலிருந்து தப்பமுடியாது என்றால், அதனை ரகசியமாக அனுபவித்துக் கொள்வது அறிவுடைமையாகும்; விளம்பரப்படுத்திக் கொள்ளக் கூடாது. விளம்பரம் விநாசத்தை உண்டுபண்ணும்; தம் குறைபாடுகளைப் பகைவர் அறியாதபடி நடந்துகொள்வது அழிவு வாராமல் காக்கும்.