பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
75

கொண்டு ஆராய்ந்து அறிவிப்பவர் நமக்கு ஒளி தரும் கண்கள் போன்றவர்; அவர்களுள் யார் தக்கவர் என்பதை அறிந்து அவர்களைத் துணையாகக் கொள்க.

தக்க துணைகள் ஒருவருக்கு வாய்த்தால் அவர்கள் எதனையும் எளிதில் சாதிக்க முடியும்; வெற்றி காண்பர்.

இடித்து அறிவுறுத்தும் துணைவர்களை ஆள்பவர்களை யாரும் கெடுக்க முடியாது; இப் பெரியவர்கள் அஞ்சாமல் தாம் கருதியதை அவர்களுக்கு அறிவுறுத்துவர்.

இடித்துச் சொல்லித் திருத்தக்கூடிய அறிஞர்களைத் துணைவராகப் பெறாவிட்டால் அரசன் தன்னைக் கெடுப்பவர் இல்லாவிட்டாலும் தானே கெட்டு அழிவான்.

முதற்பணம் போடாமல் இலாபமே இல்லை; அதனைப் போலத் தக்க சார்பு இல்லாதார்க்கு நிலைபேறு இல்லாமல் போய்விடும்.

பலபேர் பகை ஏற்படலாம்; அதனைவிடத் தீமை தருவது நல்லார்தம் தொடர்பைக் கைவிடுவது, பத்து மடங்கு தீயதும் ஆகும். இவர்கள் துணை தற்காப்பைத் தருவது ஆகும். இவர்கள் துணை நமக்கு இல்லை என்று தெரிந்தால் எதிரிகள் எளிதில் நம்மை அழித்துவிடுவர்.

46. சிற்றினம் சேராமை

பெருமைக்கு உரிய நல்லோர்கள் சிந்தித்துச் செயல்படுவர்; அவசரப்பட்டுக் கண்டவரோடு சிநேகம் கொள்ளமாட்டார்கள்; சிறியவர்கள் முன்பின் யோசிக்காமல் கண்டவர்களோடு சகவாசம் கொள்வர்.