பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. அஞ்சும்படியான செயல் செய்யாமை (குடிகளிடம் குற்றம் கண்ட வழி) தக்கபடி ஆராய்ந்து மீண்டும் அக்குற்றம் செய்யா வண்ணம், குற்றத்திற்கு ஏற்ப ஒறுப்பவனே உண்மை அரசன். 561 நீண்ட நாள் ஆக்கம் தம்மை விட்டு நீங்கா திருக்க விரும்பும் அரசர், கடுமையாக ஓங்குவது (ஒறுப்பது) போல் காட்டி மென்மையாக அடிக்க (ஒறுக்க) வேண்டும். 562 மக்கள் அஞ்சும் கொடுமைகளை யிழைக்கும் கொடுங்கோலனாயின், அரசன் உறுதியாக விரைவில் கெட்டழிவான். 563 'அரசன் கொடியவன்' என்னும்படியான பொல்லாச் சொல்லைப் பெற்ற மன்னன் வாழ்நாள் குறுகி விரைவில் அழிவான். 564 காட்சிக்கு அருமையும் கண்டால் இனிமையற்ற கடுமுகமும் உடையவனிடம் உள்ள பெரிய செல்வம், பேய்காத்த செல்வம் போன்ற தன்மையது. 565 அரசன் கடுஞ்சொல் உடையவனாயும், கண்ணோட்டம் இல்லாதவனாயும் இருந்தால், அவனது பெருஞ் செல்வம் நெடுநாள் நில்லாது அப்போதே அழியும். 566 கடுஞ்சொல்லும் அளவுகடந்த தண்டனையும், பகையழிக்கும் அரசனது வலிமையை அறுக்கும் அரமாம். 567 எதையும் ஆட்சிக் குழுவுடன் கலந்து ஆராயாத அரசன், சினங் கொண்டு சீறினால் செல்வம் சுருங்கும். 568 முன்கூட்டித் தற்காப்பு செய்து கொள்ளாத மன்னன் போர் வந்துவிட்டபோது அஞ்சி நடுங்கி விரைவில் கெட்டொழி வான். . - 569 கொடுங்கோல் ஆட்சி, கற்றறியா முரடர்களைக் கவர்ந்து துணைசேர்த்திருக்கும்; அக் கல்லாதவர் கூட்டத்தைத் தவிர நிலத்திற்கு வீண்சுமை வேறில்லை. 57 O