பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரணியல் 161 74. சிறந்த நாட்டின் இயல்பு குன்றாத விளைபொருளும் தகுதிமிக்க பெரியோரும் தாழ்வு இல்லாத செல்வர்களும் ஒருங்கு சேர்ந்திருக்கப் பெற்றிருப்பதே நல்ல நாடு. 731. மிகுந்த பொருள் வளத்தால் எவரும் விரும்பத் தக்கதாகி, அழிவு இல்லாமல் மிக மிகப் பொருள் விளைவதே உயர் நாடு. 732 ஒருசேர எவ்வளவு மக்கள் சுமை மேன்மேலும் ஏற்பட்டாலும் தாங்கிக் காத்து, அரசனுக்கு வரிப் பொருள் அனைத்தையும் செலுத்துவதே நாடு. 733 மிகுந்த பசியும், நீங்காத நோயும், அழிக்கும் பகையும் அணுகவொட்டாமல் நடப்பதே நாடு. 734 ஒற்றுமையின்றிப் பலவாகப் பிரிந்த குழுக்களும், ஆட்சியைப் பாழ்படுத்தும் உள்நாட்டுப் பகைவர்களும், அரசனைத் துன்புறுத்தும் கொலைகாரக் குறும்பர்களும் இல்லாததே சிறந்த நாடு. 735 எப்போதும் அழிவு என்பதையே அறியாததாய், தப்பித் தவறி அழிவு நேரினும் வளப்பம் குன்றாததான நாடே நாடுகளுக்குள் தலையாயது. 736 மேலிருந்து மழை நீர் - கீழிருந்து ஊற்று நீர் ஆகிய இரு வகை நீர் வளமும், வளம் வாய்ந்த மலையும், மலையிலிருந்து ஓடிவரும் ஆற்று நீரும், வலிய காவல் நிலைகளும் நாட்டிற்கு வேண்டிய உறுப்புக்களாம். 737 நோயின்மை, செல்வம், நல்ல விளைச்சல், இன்பம், தக்க காவல் ஆகிய ஐந்தும் நாட்டிற்கு அணிகலம் என்பர் 738 மக்கள் நாடித் தேடாமலேயே வளம் தருவனவே உண்மையான நாடுகள் என்பர் வருந்தித் தேடினால் வளப்பம் தரும் நாடுகள் நாடுகள் ஆகா. 739 ஆங்கு எல்லா நலங்களும் வளங்களும் அமையப் பெற்றிருப்பினும் நல்ல வேந்தன் அமையப் பெறாத நாடு பயன் இல்லாததே. 740